search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்
    X
    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது ரூ.28 கோடி லஞ்சம் வாங்கியதாக பரபரப்பு புகார்

    2015-16-ல் அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் ரூ.28 கோடியை ஸ்ரீராம் குழும நிறுவனத்திடம் லஞ்சமாக வாங்கி உள்ளதற்கான ஆதாரங்களை அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகாராக அளித்துள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சிலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடுகளில் சோதனையும் நடத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம் மீது ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் என்று அழைக்கப்படும் சி.எம்.டி.ஏ.வில் ஒவ்வொரு திட்ட அனுமதிக்கும் லஞ்சம் கேட்கப்படுகிறது. 2015-16-ல் அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் ரூ.28 கோடியை ஸ்ரீராம் குழும நிறுவனத்திடம் லஞ்சமாக வாங்கி உள்ளதற்கான ஆதாரங்களை அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகாராக அளித்துள்ளது.

    இதன் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

    2015-16 இல் பெருங்களத்தூர் பகுதியில் ஸ்ரீராம் குழுமத்தின் ஸ்ரீராம் பிராபர்டீஸ் அண்ட் இன்பிராசிட்ரக்சர் பிரைவேட் லிட், அவர்களுடைய 57.94 ஏக்கர் நிலத்தில் 24 பிளாக் 1453 வீடுகள் கொண்ட உயர்மட்ட கட்டுமானங்கள் திட்ட அனுமதிக்கு 2013-ம் ஆண்டு அன்று சி.எம்.டி.ஏ.வில் விண்ணப்பம் செய்து இருந்தனர். 2 ஆண்டுகளுக்கு மேல் காலம் தாழ்த்தி ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இந்த திட்ட அனுமதிக்காக தான் ரூ. 27.9 கோடி முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் லஞ்சமாக பெற்றதாகவும் அதற்காக ஸ்ரீராம் குழுவின் பாரத் கோல் கெமிகல் பிரைவேட் லிட் என்னும் நிறுவனம் மூலம் ரூ 27.9 கோடி பணத்தை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மகன் பிரபு நிறுவனமான முத்தம்மாள் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிட் நிறுவனத்திற்கு 2015-16-ல் கொடுக்கப்பட்டுள்ளது. திட்ட அனுமதியும் அதற்கான லஞ்ச பணமும் ஒரே காலகட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த பணத்தை பயன்படுத்தி அமைச்சர் வைத்திலிங்கம் மகன் பிரபு திருச்சியில் பாப்பகுறிச்சி பகுதியில் 4.5 ஏக்கர் நிலத்தை 24 கோடி செலவில் வாங்கி உள்ளார். 11,400 சதுர அடி நிலத்தை ரூ.1.5 கோடிக்கு 2017-ல் வாங்கியுள்ளார் மற்றும் 4.17 ஏக்கர் நிலம் சர்வே எண் 262/2 ரூ. 22.68கோடிக்கு 2019-ல் வாங்கியுள்ளார்.

    முன்னாள் வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் ஒரு திட்ட அனுமதிக்கு ரூ.28 கோடி வாங்கியுள்ளார் என்றால் அந்த காலகட்டத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து திட்ட அனுமதிகளுக்கும் எவ்வளவு தொகை வாங்கப்பட்டது?

    இந்த பணம் திட்ட அனுமதிக்காக மட்டும் கொடுக்கப்பட்ட லஞ்சமா? அல்லது கட்டுமானத்தில் சட்டத்திற்கு புறம்பாக விதிமீறல் செய்யவும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை செய்ய வேண்டும். அறப்போர் ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளது. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஸ்ரீராம் குழுமம் மற்றும் வீட்டு வசதி துறை, சி.எம்.டி.ஏ. அரசு ஊழியர்கள் உட்பட லஞ்ச ஊழலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×