search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்க புதிய நிர்வாகிகள் கனிமொழி எம்.பி. முன்னிலையில் பதவியேற்ற போது எடு
    X
    தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்க புதிய நிர்வாகிகள் கனிமொழி எம்.பி. முன்னிலையில் பதவியேற்ற போது எடு

    தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற ஆட்சி நடக்கிறது- கனிமொழி எம்.பி பேச்சு

    தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற ஆட்சி நடக்கிறது என்று கனிமொழி எம்.பி பேசினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் 2022-24ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தூத்துக்குடியில் நடந்தது. விழாவுக்கு முன்னாள் தலைவர் ஜோபிரகாஷ் தலைமை தாங்கி வரவேற்று பேசினார். 
    பதவி பிரமாணம்

    சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தொழில் அதிபர் ஆர்.மகேந்திரன், ஸ்பிக் நிறுவன முழுநேர இயக்குனர் எஸ்.ஆர்.ராமகிருஷ்ணன், டி.சி.டபிள்யூ. தொழிற்சாலை மூத்த செயல் துணைத்தலைவர் ஜி.சீனிவாசன் ஆகியோர் பேசினர். 

    சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் புதிய தலைவர் டி.ஆர்.தமிழரசு, பொதுச் செயலாளர் எஸ்.சங்கர் மாரிமுத்து, பொருளாளர் ஜே.ஜேசையா வில்லவராயர், 

    துணைத்தலைவர்கள் பி.பிரேம்வெற்றி, டி.ஆர்.பாலமுருகன், எஸ்.சுரேஷ்குமார், இணை செயலாளர்கள் விவேகம் ஜி.ரமேஷ், எஸ்.ராஜேஸ் பாலசந்திரன், எஸ்.நார்டன், நிர்வாக செயலாளர் ஜெ.பிரேம் பால்நாயகம் ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற ஒரு ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. தொழில் முதலீடுகள் வர வேண்டும் என்று தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வரும் நல்லாட்சி நடக்கிறது.

    தூத்துக்குடியை பொறுத்தவரை விமான நிலையம், துறைமுகம் விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பல தொழிற்சாலைகள் இங்கு வர வாய்ப்பு உள்ளன. தூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடியில் உணவு பூங்கா அமைந்து உள்ளது. 

    அதில் உள்ள பிரச்சினைகள் களைய நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சாலைகளின் சமூக பொறுப்பு நிதி மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை புதுப்பிக்க வேண்டும். 

    பள்ளிக்கூடங்களில் பல தேவைகள் உள்ளன. அதனை முன்னெடுத்து செல்ல வேண்டும். அந்த பள்ளிக்கூடங்களில் நன்கு படித்து வந்தால்தான் தொழில் துறைக்கு ஆட்கள் கிடைப்பார்கள்.

     திறமை உள்ளவர்களை அதிகம் உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கினால்தான் அடுத்த தலைமுறைக்கு தொழில்துறையை கொண்டு செல்ல முடியும். அதனை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். அதற்கு நீங்கள் பயிற்சி அளித்து கொண்டு வர வேண்டும். அதுதான் தூத்துக்குடி தொழில் துறையை ஆரோக்கியமாக வைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசும் போது, நகரை சீரமைக்க வேண்டும், அழகுபடுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது. அதில் உங்களது பங்களிப்பும் இருக்க வேண்டும். 

    தொழிற்சாலைகள் சமூக பொறுப்பு நிதியை நம் நகரின் முன்னேற்றத்துக்கு பயன்படுத்த வேண்டும். நகரில் கண்காணிப்பு காமிரா, கழிப்பிட வசதி அமைத்து கொடுக்கலாம். கழிவுநீர் அகற்றும் வாகனம் வாங்கலாம். குப்பைகள் தொட்டிகளை வைப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அங்கன்வாடி கட்டிடங்களை புதுப்பித்தல் போன்ற பணிகளை செய்யலாம். உங்கள் பணிகளை விரிவாக்கம் செய்ய வேண்டும். 

    கோவில்பட்டி-அருப்புக்கோட்டைக்கு இணைப்பு சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  
    தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் அரசு பணியாற்றி வருகிறது. உங்கள் தேவைகளை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது என்று கூறினார்.

    விழாவில் தொழில் அதிபர்கள் எஸ்.டி.ஆர்.பொன்சீலன் மற்றும் அகில இந்திய வர்த்தக தொழில் சங்க முன்னாள் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பொதுச் செயலாளர் சங்கர் மாரிமுத்து நன்றி கூறினார்.
    Next Story
    ×