search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    முத்துப்பேட்டையில் இன்று அதிகாலை அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

    முத்துப்பேட்டையில் இன்று அதிகாலை அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை செம்பவன்காடு கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் சந்திரபோஸ் (வயது 55) அ.தி.மு.க. பிரமுகர். நேற்று இரவு சந்திரபோஸ் தன் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் சந்திரபோஸ் வீட்டில் திடீரென பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடினர். இதில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிய தொடங்கியது.

    சத்தம் கேட்டு எழுந்த சந்திரபோஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.

    அங்கு எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    இதுகுறித்து சந்திரபோஸ் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் திருவாரூர் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.

    விசாரணையில் முத்துப்பேட்டையில் உள்ள தர்காவிற்கு நேற்று கேரளாவில் சிலர் வந்து வழிபாடு நடத்தி உள்ளனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுள்ளனர். அப்போது பில்லில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக கேரளாவை சேர்ந்தவர்களுக்கும், கடைக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது தெரிய வந்தது.

    இதில் கேரளாவை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்த சிலர் பேசியுள்ளனர். இதையடுத்து ஓட்டல்காரர்களுக்கு ஆதரவாக சிலர் பேசியுள்ளனர்.

    இதையடுத்து சமரசம் ஏற்பட்டு அனைவரும் கலைந்து சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் தவறுதலாக அதிமுக பிரமுகர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? இல்லை வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×