search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலையை அடையாறு ஆற்றில் தேடும் தீயணைப்பு வீரர்கள்
    X
    தலையை அடையாறு ஆற்றில் தேடும் தீயணைப்பு வீரர்கள்

    துண்டு, துண்டாக வெட்டி கொல்லப்பட்ட தி.மு.க. பிரமுகர்- தலையை அடையாறு ஆற்றில் தேடும் தீயணைப்பு வீரர்கள்

    செக்ஸ் தொல்லை அதிகரித்ததாலேயே தி.மு.க. பிரமுகரை கொன்றதாக கைதான பெண் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்த கொலை தொடர்பாக 4 தனிப்படையை சேர்ந்த 40 போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராயபுரம்:

    சென்னையை அடுத்த மணலி செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்கரபாணி (வயது65).

    திருவொற்றியூர் 7வது வார்டு தி.மு.க. பிரதிநிதி. வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். கடந்த 10ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சக்கரபாணி மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மகன் நாகேந்திரன் இது தொடர்பாக மணலி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அவரது செல்போன் சிக்னல் மூலம் துப்பு துலக்கிய போலீசார் ராயபுரம் கிரேஸ் கார்டன் 3-வது தெருவில் உள்ள தமீம்பானு என்பவர் வீட்டுக்கு சென்றனர். அங்கு சக்கரபாணியின் மோட்டார்சைக்கிள் நின்றது. அந்த வீட்டில் துர்நாற்றம் வீசியது.

    போலீசார் அங்கு சென்று பார்த்த போது குளியல் அறையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் சக்கரபாணியின் உடல் காணப்பட்டது. அதிர்ச்சி அடைந்த போலீசார் தமீம்பானுவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது சக்கரபாணியை தனது தம்பி வாசிம் பாஷாவுடன் சேர்ந்து கொலை செய்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து தமீம்பானு, அவரது தம்பி வாசிம் பாஷா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த ஆட்டோ டிரைவர் டெல்லிபாபு என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக தமீம்பானு போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:-

    தமீம்பானு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருவொற்றியூரில் சக்கரபாணி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார். அப்போது அவரிடம் சக்கரபாணி வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வந்தார். இதில் அவர்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தமீம்பானு அங்கிருந்து குடும்பத்துடன் வெளியேறி ராயபுரத்தில் வந்து குடியேறினார்.

    3 ஆண்டுகளுக்கு பிறகு தமீம்பானு இருக்கும் இடத்தை கடந்த மாதம் சக்கரபாணி கண்டு பிடித்தார். அதன் பிறகு தமீம்பானு வீட்டுக்கு அவர் அடிக்கடி வரத்தொடங்கினார். இது தமீம்பானுவுக்கு பிடிக்கவில்லை.

    கடந்த 10-ந்தேதி இரவு சக்கரபாணி குடிபோதையில் தமீம்பானு வீட்டுக்கு சென்றார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்பேது தமீம்பானுவின் தம்பி வாசிம்பாஷா அங்கு வந்தார்.

    அவர்கள் இருவரும் சேர்ந்து சக்கரபாணியின் தலையை சுவற்றில் மோதினார்கள். அதன் பிறகு வாசிம்பாஷா கத்தியால் சக்கரபாணியை குத்தினார். இதில் சக்கரபாணி நிலை குலைந்து கீழே விழுந்து இறந்தார்.

    அவர் இறந்து விட்டதை உறுதி செய்த தமீம்பானு, வாசிம்பாஷா இருவரும் சக்கரபாணியின் உடலை துண்டு துண்டாக வெட்டி யாருக்கும் தெரியாமல் வெளியில் வீசி விடலாம் என்று திட்டம் போட்டனர்.

    இதற்கு உதவியாக ஆட்டோ டிரைவர் டில்லிபாபு என்பவரை அழைத்தனர். அவரும் ஒத்துக்கொண்டார்.

    இதையடுத்து சக்கரபாணியின் உடலை 10 துண்டுகளாக வெட்டினார்கள். அதை தனித்தனியாக பிளாஸ்டிக் பைகளில் திணித்து வீட்டில் இருந்த குளியல் அறையில் பதுக்கி வைத்தனர்.

    முதலில் தலையை மட்டும் ஆட்டோவில் எடுத்து சென்று அடையாறு திரு.வி.க. பாலத்தில் நின்றபடி ஆற்றில் வீசினார்கள். அதன் பிறகு ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் உடலின் மற்ற பாகங்களை கொண்டு செல்ல முடியவில்லை.

    மேலும் சக்கரபாணியை காணவில்லை என்று புகார் கொடுத்ததன் அடிப்படையில் போலீசார் அவரை தேடத்தொடங்கினார்கள். சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை வைத்து சக்கரபாணி கடைசியாக சென்ற இடங்களை கண்டு பிடித்தனர்.

    அதன்படி சக்கரபாணி கொலை செய்யப்பட்ட வீடு இருந்த தெருவை அடைந்தனர். ஆனால் எந்த வீட்டில் அவர் கொலை செய்யப்பட்டார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

    போலீசார் தங்கள் தெருவுக்கு வந்து சக்கரபாணியை தேடுவதை அறிந்த தமீம்பானு, வாசிம்பாஷா ஆகியோர் அதன் பிறகு சக்கரபாணியின் உடல் பாகங்களை வெளியே கொண்டு செல்லவில்லை.

    மேலும் அதில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. அதன் மூலம் போலீசார் கண்டு பிடித்து விடக்கூடாது என்பதற்காக வீட்டில் வாசனை ஸ்பிரே அடித்து சாம்பிராணி புகை போட்டனர்.

    இதற்கிடையே போலீசார் செல்போன் சிக்னல் மூலம் துப்பு துலக்கியபோது அது தமீம்பானுவின் வீட்டை காட்டியது. இதையடுத்து அங்கு வந்த போது துர்நாற்றம் வீசியது. இதையடுத்து போலீசார் தமீம்பானுவின் வீட்டு குளியல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்கரபாணியின் உடலை கண்டு பிடித்தனர்.

    மேற்கண்ட தகவல்களை தமீம்பானு தனது வாக்கு மூலத்தில் கூறி இருந்தார். மேலும் சக்கரபாணியின் செக்ஸ் தொல்லை அதிகரித்ததாலேயே அவரை கொன்றதாக வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே தலையை காணவில்லையே என்று போலீசார் அவர்களிடம் விசாரித்த போது தான் அதை அடையாறு ஆற்றில் வீசியதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வாசிம்பாஷாவை அழைத்துக் கொண்டு அடையாறு ஆற்றுக்கு சென்றனர். அங்கு தலையை வீசிய இடத்தை அவர் அடையாளம் காட்டினார்.

    இதையடுத்து நேற்று மாலை முதல் அடையாறு ஆற்றில் சக்கரபாணியின் தலையை தேடும் பணியில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் ஈடுபட்டனர். ஆனால் இரவாகி விட்டதால் தலையை தேடும் பணி கைவிடப்பட்டது.

    அதன் பிறகு இன்று அதிகாலை 5 மணி முதல் தலையை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. சைதாப்பேட்டை, கிண்டி, மயிலாப்பூர், திருவான்மியூர் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் 30 பேர் 2 படகுகளில் அடையாறு ஆற்றில் இறங்கி சக்கரபாணியின் தலையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அடையாறு ஆற்றில் 15 அடி ஆழம் உள்ளது. எனவே படகில் இருந்தபடி பாதாள கரண்டி மூலம் தலையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே காசிமேடு கடற்கரை பகுதியிலும் அவரது தலை வீசப்பட்டு இருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் தேடி வருகிறார்கள்.

    மேலும் சக்கரபாணி கொலை தொடர்பாக தமீம்பானு, அவரது சகோதரர் வாசிம்பாஷா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பி ஓடிய ஆட்டோ டிரைவர் டில்லிபாபுவை தேடி வருகிறார்கள்.

    இந்த கொலை தொடர்பாக 4 தனிப்படையை சேர்ந்த 40 போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×