search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின்
    X
    வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின்

    தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலர்- முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார்

    கடந்த ஆகஸ்டு 2-ஆம் தேதி சட்டமன்ற நூற்றாண்டு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
    சென்னை:

    தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா சிறப்பு மலர் 355 பக்கங்கள் கொண்டதாக தயாரிக்கப்பட்டு உள்ளது.

    இந்த சிறப்பு மலர் வெளியிடும் நிகழ்ச்சி சட்டசபையில் இன்று காலை நடைபெற்றது.

    சபாநாயகர் இருக்கை அமைந்துள்ள இடத்தில் சிறப்பு மலர் வெளியீட்டு விழா நடந்தது. இதற்காக அந்தஇடத்தில் 5 நாற்காலிகள் போடப்பட்டு இருந்தது.

    இதில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அவை முன்னவர் அமைச்சர் துரை முருகன், அரசு கொறடா கோவி.செழியன் இருக்கை யில் அமர்ந்து இருந்தனர்.

    தமிழ்த்தாய் வாழ்த்துடன் 9 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு சால்வை அணிவித்து புத்தகம் வழங்கி கவுரவித்தார்.

    இதே போல அமைச்சர் துரைமுருகனுக்கு சபாநாயகர் அப்பாவு சால்வை அணிவித்து புத்தகம் வழங்கினார்.

    சபாநாயகர் அப்பாவுக்கு கொறடா கோ.வி.செழியன் பொன்னாடை அணிவித்து புத்தகம் வழங்கினார். துணை சபாநாயகர் இதே போல வழங்கினார். கொறடாவுக்கு சட்டசபை செயலாளர் சீனிவாசன் பொன்னாடை அணிவித்தார்.

    இதைத் தொடர்ந்து சட்டமன்ற நூற்றாண்டு விழா சிலை திறப்பு விழா குறித்த கருணாநிதியின் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இந்தமலரை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட முதல் பிரதியை சபாநாயகர் அப்பாவு பெற்றுக் கொண்டார்.

    தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டமன்ற கட்சி தலைவர்களான செல்வபெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.), நாகை மாலி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), சிந்தனை செல்வன் (விடுதலை சிறுத்தை), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு), சதன் திருமலைகுமார் (ம.தி.மு.க.), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் கட்சி ஆகியோருக்கும் விழா மலரை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    பின்னர் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 9 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி 9.09 மணி வரை மொத்தம் 9 நிமிடங்கள் மட்டுமே நடந்தது.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள், சட்டசபை செயலக ஊழியர்கள், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள், முதல்அமைச்சரின் செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க., பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வில்லை.
    Next Story
    ×