search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ரிக் வண்டி டிரைவர் பிச்சை எடுத்து நடைபயணம் சென்ற காட்சி.
    X
    ரிக் வண்டி டிரைவர் பிச்சை எடுத்து நடைபயணம் சென்ற காட்சி.

    லைசென்சை மீட்டுத் தரும்படி கேட்டு ரிக் வண்டி டிரைவர் பிச்சை எடுத்து நடைபயணம்

    நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையத்தில் லைசென்சை மீட்டுத் தரும்படி கேட்டு ரிக் வண்டி டிரைவர்கள் போராட்டம் நடத்தினர்.
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையத்தை சேர்ந்தவர் செங்கோடன். ரிக் வண்டி டிரைவர். இவர் ராசிபுரம் அருகே உள்ள எஸ்.ஆர்.வி. கார்டனில் வசிக்கும் ரிக் வண்டி உரிமையாளர் ஒருவரிடம் டிரைவராக வேலை பார்த்து வந்தார். 

    கடந்த 2021-ம் ஆண்டு செங்கோடன் அவரது லைசென்சை ரிக் வண்டி உரிமையாளரிடம் கொடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் லைசென்சை புதுப்பிப்பதற்காக செங்கோடன் ரிக் உரிமையாளரிடம் திருப்பி கேட்டுள்ளார். லைசென்சை திருப்பி தராததால் செங்கோடன் ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். 

    அப்போது நடவடிக்கை எடுக்காததால் கடந்த மார்ச் மாதம் ராசிபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு செங்கோடன் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசார் லைசென்சை மீட்டுத் தருவதாக கூறியதின் பேரில் போராட்டத்தை கைவிட்டார். 

    ஒரு மாதத்திற்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்காததால் நாமக்கல் மாவட்ட மோட்டார் என்ஜினியரிங் தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் செங்கோடன் குடும்பத்தை காப்பாற்றும் விதமாக பிச்சை எடுத்து நடைபயணம் போராட்டத்தை நடத்தினர்.இதில் டிரைவர் செங்கோடன் கலந்து கொண்டார்.

    எலச்சிபாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து புறப்பட்ட நடைபயணம் குருசாமிபாளையம், குருக்கபுரம் வழியாக நேற்று முன்தினம் ( செவ்வாய்க்கிழமை) இரவு ஆண்டகளூர்கேட்டுக்கு வந்தடைந்தது. அங்கு அவர்களை தடுத்து நிறுத்தி ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சுகவனம், தாசில்தார் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கந்தசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி, மாவட்ட மோட்டார் தொழிலாளர் சங்கம் சுரேஷ், எலச்சிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  விரைவில் லைசென்சை பெற்றுத் தரப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.
    Next Story
    ×