search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையத்தில் சிறப்பு தொழுகையில் பங்கேற்றவர்கள்.
    X
    மேலப்பாளையத்தில் சிறப்பு தொழுகையில் பங்கேற்றவர்கள்.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி நெல்லையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை-ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

    ரம்ஜான் பண்டிகையையொட்டி நெல்லையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
    நெல்லை:

    தமிழகம் முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக வீடுகளில் வைத்தே இஸ்லாமி–யர்கள் ரம்ஜான் பண்டிகை தொழுகையில் ஈடுபட்டனர். தற்போது கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டு உள்ளதால் பள்ளிவாசல் சென்றனர்.

    ரம்ஜான் பண்டிகைக்காக இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து இன்று சிறப்பு தொழுகை செய்தனர். மாவட்டம் முழுவதும் நடந்த இந்த தொழுகையில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

    இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்றாக கருதப்படும் இந்த நோன்பு நாட்களில் தங்களது வருமானத்தில் ஒரு பங்கை எடுத்து சேமித்து வைத்து வந்தனர்.அதனை ஏழை, எளியவர்களுக்கு அரிசி, புத்தாடைகள் உள்ளிட்டவை–களாக வழங்கினர். இன்று அதிகாலையில் இருந்தே பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் திரண்டனர். பெரும்பாலான பள்ளிவாசல்களில் காலை 8 மணி வரையிலும் சிறப்பு தொழுகை நடந்தது.

    நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை, ராதாபுரம், ஏர்வாடி, பத்தமடை உள்பட ஏராளமான இடங்களில் திறந்த வெளிகளிலும், பள்ளிவாசல்களிலும் தொழுகை நடத்தப்பட்டது.அப்போது ஒருவரையொருவர் கட்டித்த–ழுவி தங்களது அன்பை பரிமாறிக்கொண்டனர்.

    மேலும் அன்பு, கருணை, சகோதரத்துவம் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று அவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

    நெல்லை மாநகர பகுதியில் பாளையில் 12 இடங்களிலும், ஐகிரவுண்டு பகுதியில் ஒரு இடத்திலும், மேலப்பாளையத்தில் 11 இடங்களிலும், டவுன் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட இடங்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பேட்டை, பழையபேட்டை உள்ளிட்ட இடங்களிலும் பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெற்றது.

    மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடந்த தொழுகையில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கினார். அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

    மேலப்பாளையம் வி்ரிவாக்க பகுதியான கரீம் நகர் மஸ்ஜித் ஹூதா பள்ளிவாசல் வளாகத்தில் நோன்பு பெருநாள் தொழுகை நடந்தது. பள்ளிவாசல் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தொழுகை நடத்தினார்.  இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு தொழுகை செய்தார்.பாளை பஸ் நிலையம் அருகே சிந்தா மதரஸா தைக்காவிலும் சிறப்பு தொழுகை நடந்தது.

    இதேபோல் த.மு.மு.க., த.ம.ஜ.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் தொழுகையில் ஈடுபட்டனர்.  மேலப்பாளையம் நயினார் முகமது ஜூம் ஆ பள்ளி வாசல், டவுன் பேட்டை பள்ளிவாசல், பேட்டை முகமது நயினார் பள்ளிவாசல்களிலும் தொழுகை நடைபெற்றது.

     இதனையொட்டி அனைத்து பள்ளிவாசல்களிலும், மைதானங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முன்னதாக நேற்று அனைத்து பள்ளிவாசல்களும் சுத்தப்படுத்தப்பட்டு, பிளீச்சிங் பவுடர்கள் போடப்பட்டது.
    Next Story
    ×