search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் இ.பெரியசாமி
    X
    அமைச்சர் இ.பெரியசாமி

    தமிழகத்தில் மின்வெட்டு வராமல் அரசு சமாளிப்பதாக அமைச்சர் இ.பெரியசாமி பேட்டி

    நிலக்கரி தட்டுப்பாடு உள்ளபோதிலும் மின்வெட்டு வராமல் அரசு சமாளிப்பதாக அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்
    குள்ளனம்பட்டி:

    தி.மு.க. அரசு பதவியேற்று ஓராண்டிற்குள் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மின் இணைப்பு பெற்ற விவசாயிகளிடம் இன்று காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 5,902 விவசாயிகள் இலவச மின்சாரம் பெற்று பயனடைந்துள்ளனர்.

    பயனடைந்த விவசாயிகளிடம் தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் கலந்துரையாட திண்டுக்கல், வத்தலகுண்டு, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, தொப்பம்பட்டி, உட்பட 9 ஊர்களில் உள்ள திருமண மண்டபங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இதில் இலவச மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல்லில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபத்தில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, சக்கரபாணி உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை இருப்பது எல்லாருக்கும் தெரியும். மத்திய அரசு தான் நிலக்கரி ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு நிலக்கரி ஒதுக்கீடு செய்து கொடுக்கவில்லை. இருந்த போதும் தமிழக அரசு மிக திறமையாக பிரச்சினையை சமாளித்து விட்டது.

    இதனால் தமிழகத்தில் மின்சாரத் தட்டுப்பாடு என்ற பிரச்சினை இல்லை. முதல்வரும் சரி, மின்சாரத்துறை அமைச்சரும் சரி மிகுந்த கவனம் எடுத்து மின் பகிர் மானத்தில் வரக்கூடிய பிரச்சினைகளை எல்லாம் எளிதாக சமாளித்து விவசாயிகளுக்கு மின்சாரத்தை வழங்குகின்றனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிவதற்குள் 1 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும். திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை மின் இணைப்புக்காக காத்திருந்த விவசாயிகள் ஏறத்தாழ 6000 விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது.

    6 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கிடைத்-திருப்பது மகிழ்ச்சி. கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டும் தான் மின் இணைப்புகள் வழங்கப்பட்டது. இதுபோல் விவசாயிகளின் வாழ்வில் ஏற்றம் பெற பல திட்டங்களை முதல்வர் உருவாக்கியுள்ளார்.
    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×