search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    நெல்லை அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை- 2 பேர் கைது

    நெல்லை அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள பள்ளமடை கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் அக்னி மாடன். இவரது மகன் சீவல்ராஜ் (வயது29). விவசாயி.

    இவர் தமிழர் விடுதலை களம் கட்சியின் மானூர் ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை.

    நேற்று இரவு சீவல்ராஜ் வீட்டு மாடிக்கு சென்று தூங்கினார். நள்ளிரவில் மாடிக்கு சென்ற மர்ம நபர்கள் அங்கு தூங்கி கொண்டிருந்த சீவல்ராஜை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.

    அவர்கள் மாடி படிக்கட்டில் இருந்து இறங்கி ஓடியதை அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர். திருடர்கள் தான் பொருட்களை திருடி செல்கிறார்கள் என்று நினைத்து கத்தி கூச்சலிட்டுள்ளனர்.

    உடனே சீவல்ராஜின் பெற்றோரும் எழுந்து வெளியே வந்து பார்த்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் மாடிக்கு சென்று பார்த்த போது சீவல்ராஜ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர்.

    கொலை செய்யப்பட்டு கிடந்த சீவல்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் ஆய்வு செய்தனர்

    இதில் காதல் விவகாரத்தில் சீவல்ராஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த அஜித் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது தனது சகோதரியை சீவல்ராஜ் காதலித்து வந்ததாகவும், அதனை பலமுறை கண்டித்தும் அவர் கைவிடமறுத்ததால் அவரை அஜித் கொலை செய்தது தெரியவந்தது.

    மேலும் கொலைக்கு அவரது நண்பரான காளிமுத்து என்பவரும் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அஜித், காளிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×