search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமதாஸ் 2022-2023-ம் ஆண்டிற்கான பொதுநிழல் நிதிநிலை அறிக்கையை இன்று வெளியிட்டார்.
    X
    ராமதாஸ் 2022-2023-ம் ஆண்டிற்கான பொதுநிழல் நிதிநிலை அறிக்கையை இன்று வெளியிட்டார்.

    ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம்- பா.ம.க. நிழல் பட்ஜெட்டில் தகவல்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஓரளவு போக்கும் வகையில், அதன் மீதான வரி தமிழ்நாட்டில் லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்படும் என பா.ம.க. நிழல் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் 2022-2023-ம் ஆண்டிற்கான பொதுநிழல் நிதிநிலை அறிக்கையை இன்று வெளியிட்டார்.

    அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    2022-23-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் ரூ.4,87,460 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய் வரவை விட ரூ.1,94,670 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலம், வரி அல்லாத வருவாயாக ரூ.1,78,470 கோடி ஈட்ட திட்டம் வகுத்திருப்பதால்தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.

    நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.5,05,786 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.4,32,426 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.50,000 கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்பதற்காக அசலாக செலுத்தப்படும். இதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை கட்டுக்குள் கொண்டு வரப்படும். வளர்ச்சித் திட்டங்களுக்காக புதிதாக வாங்கப்படும் கடன் மிக மிக குறைந்த அளவிலேயே இருக்கும்.

    வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு அடிப்படை வருமானமாக மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும்.

    2022-23-ம் ஆண்டில் அரசுத் துறைகளில் 20,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஏற்கெனவே முடக்கி வைக்கப்பட்டுள்ள 80,000 காலியிடங்கள் நிரப்பப்படும். அதன் மூலம் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

    ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி என்ற அளவில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்படும்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஓரளவு போக்கும் வகையில், அதன் மீதான வரி தமிழ்நாட்டில் லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்படும்.

    தமிழ்நாட்டில் மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இழப்பில் இயங்கினாலும், மின் கட்டணமும், பேருந்துக்கட்டணமும் உயர்த்தப்படாது.

    12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும்.

    தமிழ்நாட்டில் உழைப்பாளர் நாளான மே 1 முதல் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

    தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை மாற்றப்பட்டு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும். இதனால் மின்கட்டணம் மேலும் 56 சதவீதம் குறையும்.

    மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். காவல்துறையினருக்கு 8 மணிநேர பணி வரம்பு நிர்ணயிக்கப்படும்.

    வன்னியர் உள்இட ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு புத்துயிரூட்ட உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. வன்னியர் உள்ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது.

    வேளாண்துறைக்கு 2022- 23-ம் ஆண்டில் மொத்தம் ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கப்படும். மணல் குவாரிகள் நிரந்தரமாக மூடப்படும்.

    மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.

    அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத்திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைபடுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×