search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்குப்பதிவு எந்திரத்தை சரிபார்த்த தேர்தல் அலுவலர்.
    X
    வாக்குப்பதிவு எந்திரத்தை சரிபார்த்த தேர்தல் அலுவலர்.

    கும்பகோணத்தில் ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணி

    கும்பகோணத்தில் 2 இடங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் மாநகராட்சி முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் தனி அறையில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    தேர்தலை முன்னிட்டு கும்பகோணம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 139 வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர்.

    கும்பகோணம் மாநகராட்சியின் தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பிரேமா, சொரூபராணி மற்றும் அதிகாரிகள், வாக்குச்சாவடி முகவர்கள் ஆகியோர் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. 

    வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கும்பகோணம் கருப்பூர் ரோட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரிக்கும் ஆடுதுறை, திருபுவனம், திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், வேப்பத்தூர், சோழபுரம், சுவாமிமலை, பாபநாசம் ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கும்பகோணத்தில் மயிலாடுதுறை சாலை நால் ரோடு அருகில் உள்ள லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டன.

    நள்ளிரவு வரை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் அந்தந்த மையங்களில் உள்ள பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு தேர்தல் அதிகாரிகளால் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ஒரு வாக்கு எண்ணும் மையத்திற்கு 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதாவது இவர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒரு ஷிப்டில் மட்டும் 1 டி.எஸ்.பி தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்&இன்ஸ் பெக் டர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஆயுதப் படை போலீசார் என 44 பேர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபடு கின்றனர். வாக்கு எண்ணிக்கை வருகிற 22&ந் தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது. இதற்காக அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கைக்கு தயார் நிலையில் உள்ளது.
    Next Story
    ×