search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மக்கள் பணத்தை வீணடிக்கக்கூடாது, சுகாதாரத்தில் திருப்பூரை முதன்மை நகராக மாற்ற வேண்டும் - தொழில்துறையினர் வலியுறுத்தல்

    புதிதாக அமையும் மாநகராட்சி நிர்வாகம் பின்னலாடை தொழில் துறையினருடன் சுமூக உறவு கடைபிடிக்க வேண்டும்.
    திருப்பூர்:

    தொழில் வளர்ச்சியில் முதன்மையானதாக திகழும் திருப்பூரை சுகாதாரத்திலும் முதன்மை பெற்ற நகராக மாற்ற வேண்டியது மேயர் மற்றும் கவுன்சிலர்களின் பணியாக இருக்க வேண்டும். 

    குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழு அமைத்து ஆலோசனை பெற்று நகர உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். திட்டம் செயல்படுத்தும் முன் சாதக பாதகங்களை ஆராய வேண்டும். மக்கள் பணத்தை வீணடிக்கக்கூடாது என்று தொழில்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.  

    இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் செயற்குழு உறுப்பினர் கே.எம்.சுப்பிரமணியன் கூறுகையில்:

    தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப போதிய உள்கட்டமைப்பு வசதிகள் திருப்பூரில் செய்யப்படவில்லை. மோசமான ரோடுகள், போக்குவரத்து நெரிசலால் பின்னலாடை நிறுவன வாகன இயக்கம், தொழிலாளர் பணிக்கு வந்து செல்வதில் அன்றாடம் சிரமங்கள் தொடர்கின்றன.

    மாநகரின் அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும். புதிதாக அமையும் மாநகராட்சி நிர்வாகம் பின்னலாடை தொழில் துறையினருடன் சுமூக உறவு கடைபிடிக்க வேண்டும். தொழில் சார்ந்த பிரச்சினைகளை கேட்டறிந்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணவேண்டும்.

    போதிய வகுப்பறை, ஆய்வகம், கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி, மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்தவேண்டும். பள்ளிகளை தரம் உயர்த்த தொழில் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்பினரிடம் தேவையான நிதி உதவிகள் பெறலாம்.

    எலாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் வர்த்தகர் சங்க தலைவர் கோவிந்தசாமி கூறுகையில்:

    குடிநீர் குழாய் பதித்தல் போன்ற பணிகளுக்காக தோண்டப்படும் சாலையை பல மாதங்களுக்கு பின்னரே சீரமைக்கின்றனர். துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம். மாநகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறைகள் இணைந்து செயல்பட வேண்டும். 

    புதிய திட்டங்களை செயல்படுத்தும்முன் இதற்காக சிறப்புக்குழு அமைக்கலாம். குடிநீர் குழாய்கள் பதித்த உடனேயே அந்த இடத்தில் சாலை போடப்பட வேண்டும்.

    நகரம் விரிவடைந்துவருகிறது. அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது அவசியம். புதிய ரிங் ரோடுகள் அமைத்தால் நகரில் நெரிசல் குறையும்.

    தொழில் வளர்ச்சியில் புகழ்பெற்றுள்ள திருப்பூரை சுகாதாரத்திலும் முதன்மை நகராக மாற்றிக் காட்ட வேண்டியது மாநகராட்சி நிர்வாகத்தின் கடமை. இதை உணர்ந்து மேயர் உட்பட கவுன்சிலர்கள் மக்கள் பணி செய்ய வேண்டும் என்றனர். 
    Next Story
    ×