search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்
    X
    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்ப குளத்தில் மயில் சிலை மறைத்து வைக்கப்பட்டுள்ளதா?

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் காணாமல் போன மயில் சிலை ஆகமவிதிகளின்படி கோவில் தெப்பக்குளத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
    சென்னை:

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள புன்னை வனநாதர் சன்னதியில் மிகவும் பழமை வாய்ந்த புராதன மயில் சிலை காணாமல் போனது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு சிலை தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    புராதன சின்னமாக விளங்கக்கூடிய பழமையான மயில் சிலையை அகற்றி விட்டு அதற்கு பதில் வேறு சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், உண்மையான சிலை திருடப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் காணாமல் போன சிலை எங்கு இருக்கிறது என்பது தெரியாமலேயே உள்ளது.

    இதுதொடர்பாக நரசிம்மன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் 6 வாரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    காணாமல் போன மயில் சிலை ஆகமவிதிகளின்படி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதையடுத்து கோவில் தெப்பக்குளத்தில் இறங்கி மயில் சிலை மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டுபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நேற்று போலீஸ் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள், நீச்சல் வீரர்களுடன் கோவில் குளம் அருகில் கூடினார்கள்.

    இதற்காக 6 படகுகள் மற்றும் ஸ்கூபா நீச்சல் வீரர்கள் ஆகியோரும் வரவழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் திடீரென குளத்தில் மூழ்கி மயில் சிலையை தேடும் பணி தள்ளி வைக்கப்பட்டது. வேறொரு நாள் இந்த பணியை மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பது பற்றி தெரிவிக்கவில்லை.

    இதன் மூலம் இன்னொரு நாள் இதேபோன்று திட்டமிடப்பட்டு மயில் சிலையை தேடி கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

    Next Story
    ×