search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.
    X
    மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

    பாளை அருகே இன்று 4 வழிச்சாலையில் பொதுமக்கள் மறியல்

    பாளை அருகே இன்று நான்குவழிச்சாலையில் பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
    நெல்லை:

    நெல்லை வழியாக கன்னியாகுமரிக்கு செல்லும் நான்கு வழி சாலையில் பாளை பொட்டல் உள்ளது. இந்த பகுதிக்கு ஒரு புறத்தில் இருந்து மறுபுறம் செல்வதற்கு நான்கு வழி சாலையை கடந்து தான் செல்ல வேண்டும் இதன் காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தூய்மை பணியாளர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் சாலையை கடக்க முயன்ற மந்திரம் என்ற வாலிபர் சாலை விபத்தில் சிக்கினார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில் இன்று பொட்டல், கீழநத்தம், வடக்கூர், மணப்படை, மணக்காடு, திருமலை கொழுந்துபுரம், சீவலப்பேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பொட்டல் விலக்கு நான்கு வழிச்சாலையில் தொடரும் விபத்துகளை தடுக்க கோரிக்கை விடுத்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் நான்கு வழி சாலையில் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    தொடர் உயிர் இழப்பை தடுப்பதற்கு இந்தப் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருவதாகவும், ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
    Next Story
    ×