search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வானிலை ஆய்வு மையம்
    X
    வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில் இயல்பை விட வடகிழக்கு பருவமழை அதிகம்- வானிலை மையம் தகவல்

    கடந்த அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கணக்கின்படி, தமிழகத்தில் இயல்பை விட 59 சதவீதம் அதிகமாக வடகிழக்கு பருவமழை பதிவாகியிருந்தது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். ஆண்டு மழைப் பொழிவில் இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் தமிழகம் அதிக மழை பெறும். அந்தவகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த பருவமழையை எதிர்பார்த்து தமிழ்நாடு காத்திருக்கும்.

    அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. முதலில் மழை சற்று குறைவாக இருந்தாலும், நவம்பர் மாதத்தில் எதிர்பார்த்த மழையை விட அதிக மழையை கொட்டியது. தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் அந்த மாதத்தில் இயல்பை விட அதிகமாகவே மழை பதிவானது.

    அதனைத்தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் மழை குறைவாகவே பதிவானது. ஒட்டுமொத்தமாக கடந்த அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கணக்கின்படி, தமிழகத்தில் இயல்பை விட 59 சதவீதம் அதிகமாக வடகிழக்கு பருவமழை பதிவாகியிருந்தது.

    இம்மாதம் தொடக்கத்தில் இருந்து பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டாலும், அவ்வப்போது சில இடங்களில் மழை பெய்து கொண்டு தான் இருந்தது. அந்தவகையில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வந்தது. இந்த நிலையில் தற்போது தென் இந்திய பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை இன்று (சனிக்கிழமை) விலகுவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டில் (2020) இயல்பை விட 6 சதவீதம், அதற்கு முந்தைய ஆண்டில் (2019) இயல்பை விட 2 சதவீதம் அதிகமாகவும், 2018-ம் ஆண்டில் இயல்பை விட 24 சதவீதம் குறைவாகவும் மழை பெய்து இருக்கிறது. அந்தவகையில் பார்க்கும்போது இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாகவே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×