search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நூல் விலை உயர்வால் ஜவுளித்தொழில் வேறு மாநிலங்களுக்கு செல்லும் அபாயம்

    தற்போது நிலவி வரும் கடுமையான நூல் விலை உயர்வு, கூலி உயர்வு போன்றவைகளால் ஜவுளித்தொழில் செய்யமுடியாத நிலை உருவாகி வருகிறது.
    பல்லடம்:

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. 

    இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இந்த நிலையில் நூல் விலை உயர்வு, கூலி உயர்வு போன்றவைகளால் ஜவுளித்தொழில் தமிழகத்தை விட்டு வேறு மாநிலங்களுக்கு செல்லும் அபாயம் உள்ளதாக பல்லடத்தை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக உள்ள விசைத்தறி ஜவுளித்தொழில் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த ஜவுளித் துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் நெருக்கடியை சந்தித்து வந்தது.

    இந்தநிலையில் தற்போது நிலவி வரும் கடுமையான நூல் விலை உயர்வு, கூலி உயர்வு போன்றவைகளால் ஜவுளித்தொழில் செய்ய முடியாத நிலை உருவாகிவருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் காடா ஜவுளித் தொழில் தமிழகத்தை விட்டு வேறு மாநிலங்களுக்கு சென்றுவிடும். 

    ஏனென்றால் பஞ்சு உள்ளிட்ட மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் உள்நாட்டில் அவற்றின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. அதனால் உள்நாட்டில் நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகையின் போது 32 வார்ப்பு நூல் ரூ.275க்கு விற்பனையானது. தற்போது ரூ.350க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    அதே சமயம் துணியின் விற்பனை விலை உயரவில்லை. அதிக விலைக்கு நூலை வாங்கி துணி உற்பத்தி செய்து அசல் விலையை காட்டிலும் நஷ்டத்திற்கு துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

    இந்த நிலையில் மகாராஷ்டிரா, குஜராத் போன்ற வட மாநிலங்களில் தொழிலாளர்களின் கூலி குறைவு. மேலும் அந்த பகுதியில் விசைத்தறி தொழில் தொடங்க மற்றும் விரிவாக்கத்திற்கு 40 சதம் அரசு மானியம் அளிக்கிறது.

    அங்கு மகளிர் தொழில் முனைவோருக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.3க்கும், பொது பிரிவினருக்கு ரூ.4.70 பைசாவிற்கும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. அதே சமயம் தமிழகத்தில் தொழில் பயன்பாட்டு மின் கட்டணம் ஒரு யூனிட்க்கு ரூ.7.50 பைசாவாக உள்ளது.

    மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் விசைத்தறி துணி உற்பத்தி தொழில் தொடங்க தமிழக விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு அந்த மாநில அரசுகள் அழைப்பு விடுத்து வருகிறது. 

    மானியம், மின் கட்டண சலுகை, நிலம் ஒதுக்கீடு போன்ற சலுகைகள் வழங்க தயாராக இருப்பதாகவும் மேலும் தொழில் துறையில் மிகவும் பின்தங்கிய பகுதியில் தொழில் தொடங்கினால் செலுத்தப்படும் மாநில ஜி.எஸ்.டி. வரியில் 80 சதம் திரும்ப வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

    இது போன்ற காரணங்களால் காடா ஜவுளித் தொழில் தமிழகத்தை விட்டு வேறு மாநிலங்களுக்கு சென்றுவிடும் அபாயம் உள்ளது. மேலும் விசைத்தறி துணி உற்பத்தியின் முக்கிய மூலப்பொருளான பஞ்சை பங்கு சந்தை பட்டியலில் (ஆன்லைன் வர்த்தகம் ) இருந்து நீக்கம் செய்ய வேண்டும். 

    இல்லை என்றால் இந்தியாவில் ஜவுளி உற்பத்தி தொழில் காணாமல் போகும் சூழ்நிலை உருவாகிவிடும். எனவே மத்திய,மாநில, அரசுகள் பஞ்சு ஏற்றுமதிக்கு தடைவிதித்து, நூல் விலையை கட்டுப்படுத்தி  நூல் உற்பத்தியை அதிகப்படுத்தி, இந்த ஜவுளித்தொழிலை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×