search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி சன்னதி வீதியில் இன்று காலை கூடியிருந்த பக்தர்கள் கூட்டம்.
    X
    பழனி சன்னதி வீதியில் இன்று காலை கூடியிருந்த பக்தர்கள் கூட்டம்.

    பழனியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரிப்பு

    நாளை முதல் 5 நாட்களுக்கு வழிபாட்டுத்தலங்கள் அடைக்கப்படும் என்பதால் இன்று பழனி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
    பழனி:

    பழனியில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூசத்தின்போது பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி முருகனை தரிசிக்க நடந்து வருவது வழக்கம்.

    ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுளை அரசு விதித்துள்ளது. அதன்படி நாளை முதல் வருகிற 18-ந்தேதி வரை அனைத்து வழிபாட்டு தலங்களும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பழனியில் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், தேரோட்டத்திலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள்ளது.

    இதனால் கடந்த சில நாட்களாகவே பழனிக்கு பக்தர்கள் அதிக அளவில் பாதயாத்திரையாக நடந்து வந்த வண்ணம் உள்ளனர். இன்று காலை வெளியூர் பக்தர்கள் பஸ்கள் மற்றும் ரெயில்களிலும் வரத்தொடங்கினர். இதனால் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் வெள்ளம்போல் காட்சி அளித்தனர்.

    வழக்கமாக தைப்பூச தேரோட்டத்திற்கு வரும் கூட்டத்தைப்போல இன்று பழனி நகரம் காட்சி அளித்தது.

    தைப்பூச திருவிழாவின் போது கூட்ட நெரிசலை தவிர்க்கவும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் முக்கிய சாலைகள் ஒருவழிப்பாதையாக அமல்படுத்தப்படும். ஆனால் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் தற்போது கடைபிடிக்கவில்லை. இதனால் அனைத்து சாலைகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கட்டுக்கடங்காத கூட்டத்தை ஒழுங்குபடுத்த 600 போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அவர்களும் கூட்டத்தை ஒழுங்குபடுத்த முடியவில்லை. பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிரசாதமாக பஞ்சாமிர்தம் வாங்கி செல்வது வழக்கம். ஆனால் நேற்று மாலையே பல கடைகளில் பஞ்சாமிர்தம் தீர்ந்து விட்டது. அவற்றை கொண்டு வருவதற்கு வாகனங்களும் வர முடியாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

    இதனால் பஞ்சாமிர்தம் வாங்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும் சில கடைகளில் பஞ்சாமிர்தத்தை வாங்க நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் பழனி நகரம் திணறி வருகிறது.

    Next Story
    ×