search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொய்யா சாகுபடியில் உடுமலை விவசாயிகள் ஆர்வம்

    ஏக்கருக்கு அதிகப்பட்சமாக 9-10 டன் வரை மகசூல் கிடைக்கிறது. தற்போது கேரளா மற்றும் உள்ளூர் வியாபாரிகளுடன் ஒப்பந்த முறையில் கொய்யா விற்பனை செய்கின்றனர்.
    மடத்துக்குளம்:

    உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கிணற்றுப்பாசனத்துக்கு பல்வேறு காய்கறி சாகுபடிகள் மேற்கொள்கின்றனர். இதில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் மாற்றுச்சாகுபடி செய்து நிலையான வருவாய் பெற பல்வேறு முயற்சிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

    அவ்வகையில் தற்போது பரவலாக கொய்யா சாகுபடி மேற்கொள்ள துவங்கியுள்ளனர். குறிப்பாக ‘தைவான் பிங்க்‘ ரகம் உடுமலை பகுதி விவசாயிகளின் பிரதான தேர்வாக உள்ளது. 

    குறுகிய காலத்தில் குறைந்த தண்ணீரிலும் இவ்வகை கொய்யாவில் அதிக மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    ஏக்கருக்கு ரூ. 1,100 முதல் ரூ.1,200 செடிகள் வரை நடவு செய்து சொட்டு நீர் பாசன முறையில் பாசனம் மேற்கொள்கின்றனர். 3 மாதங்களில் காய்ப்பு துவங்கி 8 மாதங்களுக்கு பிறகு நல்ல மகசூல் கொடுக்கிறது.

    ஏக்கருக்கு அதிகப்பட்சமாக 9-10 டன் வரை மகசூல் கிடைக்கிறது. தற்போது கேரளா மற்றும் உள்ளூர் வியாபாரிகளுடன் ஒப்பந்த முறையில் கொய்யா விற்பனை செய்கின்றனர். இம்முறையில் வியாபாரிகளே ஆட்களை அழைத்து வந்து கொய்யாவை பறித்துச் செல்வதும் விவசாயிகளுக்கு சாதகமாகியுள்ளது.

    தற்போது எலையமுத்தூர், ஜல்லிபட்டி, வாளவாடி உட்பட பல்வேறு பகுதிகளில் கொய்யா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இச்சாகுபடிக்கான நாற்றுகளை தோட்டக்கலைத்துறை வாயிலாக வினியோகித்தால் சாகுபடி பரப்பும் அதிகரிக்கும். 

    சிறு, குறு விவசாயிகளுக்கும் நிரந்தர வருவாய் கிடைத்து அதிக அளவு பயன்பெறுவார்கள் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பல்லடம் விவசாயிகள் சிறு தானிய சாகுபடியில் ஆர்வம் காட்ட வேண்டும் என வேளாண்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். 

    இதுகுறித்து பல்லடம் வேளாண்மை துறையினர் கூறியதாவது:

    ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களை தொழில்நுட்ப உதவியுடன் அதிக அளவில் சாகுபடி செய்து விவசாயிகள் லாபம் பெற முடியும். திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 1.40 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ராகி, தினை,சோளம், கம்பு, உள்ளிட்ட சிறுதானிய சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

    இதில் உடுமலைப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் அதிகளவில் சோளம், ராகி, தினை, சாமை உள்ளிட்ட சிறு தானிய பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. பல்லடம்,பொங்கலூர் பகுதிகளில் சோளம் மட்டுமே அதிகளவில் பயிரிடப்படுகிறது .

    சோளம் பயிரிடுவதன் மூலம் கிடைக்கும் சோளதட்டு கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது. சிறுதானிய பயிரில் தட்டு கிடைக்காது என்பதால் விவசாயிகள் சோள சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மற்ற சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் கவனம் செலுத்துவதில்லை. 

    பல்லடம், பொங்கலூர் பகுதிகளில் ராகி, சாமை, தினை, குதிரை வாலி உள்ளிட்ட சிறுதானிய சாகுபடி மேற்கொள்வதற்குரிய பருவ நிலை உள்ளது. சில விவசாயிகள் பயிரிட்டாலும் அதிக பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் .

    சிறு தானியங்களுக்கான நுண்ணூட்டம், உயிர் உரங்கள், தொழில்நுட்ப வழிகாட்டுதல் இலவசமாக வழங்கப்படுகிறது அனைத்து வகை இடுபொருட்களும், 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. விதை பெருக்க திட்டத்தில் விவசாயிகள் பயிரிடும் விதைகளுக்கு அதிக விலை வழங்கப்படுகிறது. 

    பிற விளை பொருட்கள் பயிரிடுவதை காட்டிலும் சிறுதானியங்களை பயிரிட்டு குறைந்த காலத்தில் விவசாயிகள் அதிக லாபம் பெற முடியும். எனவே பல்லடம், பொங்கலூர் பகுதிகளில் சிறுதானியங்களை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட முன்வர வேண்டும். இவ்வாறு வேளாண்மை துறையினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×