search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூஸ்டர் தடுப்பூசி முகாமை டீன் நேரு தொடங்கி வைத்த காட்சி.
    X
    பூஸ்டர் தடுப்பூசி முகாமை டீன் நேரு தொடங்கி வைத்த காட்சி.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி பணி தொடக்கம்

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. மருத்துவக்கல்லூரி டீன் நேரு முகாமை தொடங்கி வைத்தார்.
    தூத்துக்குடி:

    நாடு முழுவதும் தொடர்ந்து வேகமெடுக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.

    முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதை கடந்த இணை நோய் உள்ளவர்களுக்கு இந்த பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. 

    ஏற்கனவே முதல் மற்றும் 2-ம் தவணையாக பொதுமக்கள் செலுத்திக்கொண்ட அதே தடுப்பூசியே பூஸ்டர் டோஸ் ஆக போடப்படும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 

    கடந்த 39 வாரங்களுக்கு முன்பு தடுப்பூசி செலுத்தி யவர்கள் இந்த பூஸ்டர் டோஸ் போட தகுதியானவர்கள். இதற்காக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கணக்கெடுப்பு பணியை சுகாதாரத்துறை நடத்தி முடித்துள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் மே மாதம் 3-ந்தேதி வரை தடுப்பூசி செலுத்துக்கொண்டவர்களை கணக்கெடுக்கும் பணி நடந்து முடிந்து விட்டது. 

    தூத்துக்குடி சுகாதார மாவட்டத்தில் 7, 600 பேரும், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் 6, 200 பேரும் பூஸ்டர் போடுவதற்கு தகுதியான வர்களாக கண்டறியப்பட்டு உள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் இன்று முதல் மொத்தம் 13 ஆயிரத்து 800 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள செவிலியர் பள்ளியில் இன்று மருத்துவமனை டீன் நேரு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். 

    இதில் உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர். முதல் நாளான இன்று முன்கள பணியாளர்கள் ஆர்வமுடன் போட்டு சென்றனர். 

    இணை நோயால் பாதிக்கப்பட்ட 60 வயதை கடந்தவர்கள் குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
    Next Story
    ×