search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை பகுதியில் கீரை - சணப்பை சாகுபடி பணிகள் மும்முரம்

    உடுமலை உழவர் சந்தையில் கிளுவங்காட்டூரில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும் கீரை ரகங்களே பிரதான இடம் பிடிக்கிறது.
    உடுமலை:

    உடுமலை அருகேயுள்ள கிளுவங்காட்டூரில் ஆண்டு முழுவதும் சுழற்சி முறையில் கீரைகள் சாகுபடி செய்வதால் கீரை கிராமம் என பெயர் பெற்றுள்ளது. அப்பகுதி விவசாயிகள் குறைந்த பரப்பில் சுழற்சி முறையில் கீரை வகைகளை பயிரிட்டு பராமரிக்கின்றனர்.

    உடுமலை உழவர் சந்தையில் கிளுவங்காட்டூரில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும் கீரை ரகங்களே பிரதான இடம் பிடிக்கிறது. 

    குறிப்பாக சிறுகீரை, அரைக்கீரை, வெந்தயக்கீரை, மணத்தக்காளி உட்பட கீரைகளை பிரதானமாக சாகுபடி செய்கின்றனர். இச்சாகுபடிக்காக விளைநிலங்களை 10 சென்ட் அளவுக்கு பாத்திகளாக பிரித்து நடவு செய்கின்றனர். செடியின் 25வது நாளில் இருந்து அறுவடை செய்கின்றனர்.

    அடுத்து 15 முதல் 20 நாட்கள் இடைவெளியில் கீரை தழைத்து அடுத்த அறுவடைக்கு தயாராகிறது. ஒரு முறை நடவு செய்தால் 20 முறை கீரை அறுவடை செய்கின்றனர். குறைந்த தண்ணீர் பராமரிப்பு மட்டுமே தேவையுள்ளதால் சிறு, குறு விவசாயிகளுக்கு இச்சாகுபடி நிரந்தர வருவாய் அளித்து வருகிறது.

    இந்நிலையில் வடகிழக்கு பருவமழை சீசனில் போதிய இடைவெளி விட்டு ஒரு மாதத்துக்கும் அதிகமாக மழை நீடித்தது. 

    இதனால் கீரை சாகுபடிக்கான நாற்றுகளை உற்பத்தி செய்வதிலும் பராமரிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. அதிக ஈரம் காரணமாக சாகுபடியை கைவிடும் நிலை உருவானது.

    தற்போது மழை இடைவெளி விட்டுள்ளதால் மீண்டும் கீரை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். செடிகளின் வளர்ச்சித்தருணத்தில் களையெடுத்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இனி வரும் வாரங்களில் உடுமலை உழவர் சந்தைக்கு வழக்கம்போல் கீரை வரத்து இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். உடுமலை சுற்றுப்பகுதிகளில் களிமண் சாகுபடி நிலங்களில் மானாவாரியாக பருவமழையை அடிப்படையாகக்கொண்டு கொத்தமல்லி பயிரிடப்படுகிறது.

    சாகுபடியில் 90 நாட்களுக்கு பிறகு செடிகள் அறுவடை செய்யப்பட்டு அதில் இருந்து மல்லி தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது. இந்தாண்டு விதைப்பு துவங்கியபோது விதை மல்லி, கிலோ ரூ. 120 க்கு விற்பனையானது. ஏக்கருக்கு 8 கிலோ விதை தூவப்படுகிறது. 

    தண்ணீர் பாய்ச்ச தேவையில்லாத நிலையில் களையெடுத்தல் மற்றும் மருந்து மட்டும் தெளிக்கப்படுகிறது. இந்தாண்டு விதைப்பு செய்து செடிகளின் வளர்ச்சி தருணத்தில் பருவமழை துவங்கியது.

    அதிக மழையால், விளைநிலங்களில் ஈரம் அதிகரித்து வெயிலும் இல்லாததால் செடிகள் போதிய வளர்ச்சி அடையவில்லை. பாதியிலேயே செடிகளில் பூ விட்டதால் விளைச்சல் முற்றிலுமாக குறைந்துள்ளது.

    ஆண்டுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் மானாவாரி சாகுபடியும் கைவிட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். 

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

    அதிக மழையால் இடுபொருள் செலவு கூட கிடைக்காது. வழக்கமாக ஏக்கருக்கு 40 கிலோ கொண்ட 10 மூட்டை விளைச்சல் கிடைக்கும். இந்த சீசனில் 2 மூட்டையே விளைச்சல் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் வருவாய் அறுவடை செலவுக்கு கூட கட்டுப்படியாகாது. 

    தோட்டக்கலைத்துறையினர் நேரடி ஆய்வு நடத்தி நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை அளிக்க வேண்டும். தற்போதுள்ள செடிகளை அறுவடை செய்யாவிட்டால் அரைகுறையாக விளைந்துள்ள கொத்தமல்லியும்  உதிர்ந்து விடும். எனவே உடனடியாக அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்த வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    உடுமலை ஏழு குள பாசன பகுதிகளில் பிரதான சாகுபடியாக கரும்பு உள்ளது. தொடர்ச்சியாக ஒரே வகை சாகுபடியை மேற்கொள்வதால் மண் வளம் பாதிக்கிறது. 

    எனவே கரும்பு கரணை நடவுக்கு முன்னர் மண் வளத்தை மேம்படுத்த சணப்பை சாகுபடி செய்துள்ளனர். விளைநிலத்தில் சணப்பை விதை பயிரிட்டு 45 நாள் கழித்து நிலத்தில் உழவு செய்கின்றனர். இதனால் மண்ணில் உள்ள அங்கக கரிம அளவு மண்ணின் உயிர் சக்தி அதிகரிக்கிறது.

    மண்ணின் இறுக்கத்தை தளர்த்தி நீர் மற்றும் காற்று எளிதில் மண்ணில் புகும் வகையில் செய்கிறது. செங்குளம் பாசனப்பகுதியில் பருவமழைக்கு முன்னர் விதைப்பு செய்த சணப்பை பூ விட்டு உழவு செய்யும் தருணத்தில் உள்ளது.
    Next Story
    ×