search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மானிய விலையில் இடுபொருட்கள், விதைகள்

    காய்கறி தோட்டம் அமைக்கும் வகையில் கத்திரிக்காய், மிளகாய், வெண்டைக்காய் உள்ளிட்ட பல்வேறு விதைகள் கொண்ட தொகுப்பு ரூ.15-க்கு வழங்கப்படுகிறது.
    உடுமலை:

    உடுமலை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் மாடித்தோட்டம் அமைக்க விதைகள், இடுபொருட்கள், காய்கறி விதை தொகுப்பு மற்றும் மூலிகை செடிகள் வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:

    தமிழக அரசின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத்திட்டத்தின் கீழ் வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்க ரூ.900 மதிப்புடைய 6 வகையான காய்கறி விதைகள், 6 செடி வளர்க்கும் பைகள், 2 கிலோ அளவிலான தென்னை நார்கட்டிகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    மேலும் 400 கிராம் உயிர் உரம், 200 கிராம் உயிரி கட்டுப்பாட்டு காரணி, 100 மி.லி., இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் சாகுபடி முறைகளை விளக்கும் கையேடு ஆகியவை அடங்கிய மாடித்தோட்ட ‘கிட்’ ரூ.225க்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    அதேபோல் காய்கறி தோட்டம் அமைக்கும் வகையில் கத்திரிக்காய், மிளகாய், வெண்டைக்காய், தக்காளி, அவரை, பீர்க்கன், புடலை, பாகல், சுரைக்காய், கொத்தவரை, சாம்பல்பூசணி ஆகிய விதைகள் கொண்ட தொகுப்பு ரூ.15க்கு வழங்கப்படுகிறது.

    மேலும் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்து தாவரங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் பப்பாளி, எலுமிச்சை, முருங்கை. கறிவேப்பிலை, திப்பிலி, கற்பூரவல்லி, புதினா, சோற்றுகற்றாழை ஆகிய 8 செடிகள் அடங்கிய ஊட்டச்சத்து தொகுப்பு மானிய விலையில் ரூ. 25க்கு வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் காய்கறி விதைகள், மூலிகைகள் உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் இருப்பு உள்ளது. தேவையானவர்கள் பெற்று பயன் பெறலாம். இவ்வாறு  தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    குமரலிங்கம் தோட்டக்கலை உதவி இயக்குனர் திவ்யா கூறியதாவது:

    விவசாய நிலங்களில் பனை மரங்களை அதிகரிக்கும் நோக்கில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் மூலம் பனை விதைகள் முழு மானியத்தில் வழங்கப்படுகிறது. 

    மடத்துக்குளம் சங்கரமநல்லூர் மடத்தில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் தேர்வு செய்யப்பட்ட பழங்களை 3 மாதம் வரை வைத்து பராமரித்து அவை சிறிது வளர்ந்த பின்பு பைகளில் அடைக்கப்பட்டு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் வழங்குகிறது.

    எனவே தேவைப்படும் விவசாயிகள் தற்போது பனை நடவுக்கு நல்ல சூழ்நிலை இருப்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பனை விதைகளை தங்கள் தோட்டங்களில் வளர்க்கலாம். 

    பனை விதைகளை மானியத்தில் பெற சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று, ரேஷன் கார்டு, ஆதார், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2, ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை அணுகலாம். 

    உழவன் செயலியிலும் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×