search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

    சென்னையில் தினமும் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. கடந்த 20-ந்தேதி 126 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் அது நேற்று 194-ஆக உயர்ந்துள்ளது.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் நோய் பாதித்தவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் சென்னை முழுவதும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    சென்னையில் கடந்த சில மாதங்களாக தினசரி பாதிப்பு 130-க்கும் கீழ் குறைந்துள்ளது. அனைத்து மண்டலங்களிலும் நோயின் தாக்கம் குறைவாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட தொடங்கி இருக்கிறது.

    இதன் காரணமாக 15 மண்டலங்களிலும் கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

    கடந்த 20-ந்தேதி அன்று தினசரி பாதிப்பு 126-ஆக இருந்தது. அது படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்வதை காண முடிகிறது. 21-ந் தேதி அன்று 132- ஆக இருந்த பாதிப்பு அதற்கு மறுநாள் 136 ஆக அதிகரித்தது.

    டிசம்பர் 23-ந்தேதி அன்று 145-ஆக இருந்த தினசரி பாதிப்பு அதற்கு அடுத்தடுத்த நாட்களில் மேலும் அதிகரித்தது. இதன்படி டிசம்பர் 26-ந்தேதி அன்று இந்த எண்ணிக்கை 171 ஆக உயர்ந்தது.

    தற்போது 200-ஐ தொடும் நிலைக்கு சென்றுள்ளது. நேற்று சென்னையில் தினசரி பாதிப்பு 194-ஆக அதிகரித்து உள்ளது.

    சென்னையில் இது போன்று கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நோய்தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, கடந்த ஒரு வாரமாக சென்னையில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வார்டு வாரியாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

    தினமும் சென்னையில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கொரோனா விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    பொது இடங்களில் முக கசவம் அணியாமல் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கதாவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 78 பேருக்கு புதிதாக நோய்தொற்று இருப்பதையும் அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கொரோனா தொற்று மேலும் அதிகரிக்காமல் இருக்க அடுத்தடுத்த நாட்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

    சென்னையில் கொரோனா பாதிப்பு 0.6 சதவீதமாக இருந்தது. தற்போது அது ஒரு சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் 12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடந்த மே மாதம் சென்னையில் தினசரி பாதிப்பு 7564 ஆக இருந்தது. அது படிப்படியாக குறைந்து கடந்த மாதம் 105 ஆக இருந்தது.

    இதன் பிறகு இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வந்துள்ளது. கடந்த வாரம் வரையில் தினசரி பாதிப்பு 115-ல் இருந்து 132 வரையில் பதிவாகி வந்தது. அது நேற்று 194 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகம் முழுவதும் 619 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 3-ல் ஒரு பகுதி சென்னையில் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×