search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    நெடுஞ்செழியனுக்கு சேப்பாக்கத்தில் சிலை- மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

    அண்ணாவிடம் மிகுந்த நன்மதிப்பினைப் பெற்றதோடு, மிகவும் குறுகிய காலத்தில் இயக்கத்தின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக உயர்ந்து, உச்சம் தொட்டார் நாவலர் இரா. நெடுஞ்செழியன்.
    சென்னை:

    தலைசிறந்த பகுத்தறிவுவாதிகளில் ஒருவர் என்றும், எனக்கே பாடம் கற்றுத் தரும் அளவிற்குத் தகுதி வாய்ந்தவர் நாவலர்’’ என்று தந்தை பெரியார், ‘‘தம்பி வா தலைமை ஏற்க வா, நாட்டுக்குக் கிடைத்திருக்கும் நல்லவரே; நாவலரே” என பேரறிஞப் பெருந்தகை அண்ணா அவர்களாலும், ‘‘நாடு போற்றும் நாவலரே; நற்றமிழ்க் காவலரே; நடைமிடுக்கும், நகைச்சுவை எடுப்பும் நற்றமிழ்ப் பேச்சால் நாட்டோரைக் கவர்ந்திழுக்கும் நாவண்மை மிக்க நாவலரே’’ என முத்தமிழறிஞர் கலைஞர் ‘‘கற்பதில் நாட்டமும் கற்றதைத் தெளிவதில் ஆர்வமும் உண்மையை ஓர்வதில் ஊக்கமும், ஓர்ந்ததை விரித்துரைப்பதில் உவகையும் கொண்ட பண்பாளர்’’ என இனமான பேராசிரியரால் போற்றிப் புகழப்பட்டவரே நாவலர் இரா. நெடுஞ்செழியன் ஆவார்.

    ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் 11.07.1920-ம் ஆண்டு ராசகோபாலனார்மீனாட்சி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். தமிழ்மொழி மீது கொண்டிருந்த அளவற்றப் பற்றின் காரணமாக, இரா. நாராயணசாமி என்கின்ற தனது பெயரினை இரா.நெடுஞ்செழியன் என்று மாற்றிக் கொண்டார்.

    பெரியார் பால் ஈர்க்கப்பட்டு, 1944-ம் ஆண்டு தந்தை பெரியாருடன் திராவிட இயக்கத்தில், இளமைக் காலத்திலேயே, தன்னுடைய 24 -ம் வயதில் இணைத்துக் கொண்டார்.

    அண்ணாவிடமும் மிகுந்த நன்மதிப்பினைப் பெற்றதோடு, மிகவும் குறுகிய காலத்தில் இயக்கத்தின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக உயர்ந்து, உச்சம் தொட்டார்.

    இடைவிடாத அரசியல் மற்றும் ஆட்சிப் பணிகளுக்கு இடையிலும், அழகுத் தமிழில் எழுதும் பழக்கமதை என்றும் கைவிடாத காரணத்தால், எண்ணற்ற கதைகள், கட்டுரைகளோடு 30-க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.

    1967 முதல் 1969 வரை பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சராகவும், 1971 முதல் 1975 வரையில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியிலும் கல்வி அமைச்சராகவும் சிறப்பாக பணியாற்றினார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘‘திராவிட இயக்கத்தின் சொல்லோவியம் நடமாடும் பல்கலைக்கழகம் நாவலரின் நூற்றாண்டு நிறைவு விழாவினை அறிவு சார்ந்த தமிழ் உலகமும், திராவிட இயக்கத்தின் தொண்டர்களும் கொண்டாடி மகிழ்வோம்” என அறிவித்திருந்தார். மேலும், கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது நாவலர் நெடுஞ்செழியன் அவர்களுக்கு சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் அன்னாரின் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள நாவலர் இரா.நெடுஞ்செழியனின் திருவுருவச் சிலையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைத்து, சிறப்பிக்க உள்ளார்கள்.


    Next Story
    ×