search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றாலம் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்- ஐயப்ப பக்தர்கள்
    X
    குற்றாலம் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்- ஐயப்ப பக்தர்கள்

    குற்றாலம் மெயினருவியில் முதல் நாளில் 20 ஆயிரம் பேர் குளித்து மகிழ்ந்தனர்

    கொரோனா பரவல் காரணமாக தீவிரமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் குற்றாலத்தில் 8 மாதங்களுக்கு பின்னர் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஏப்ரல் 16-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது.

    காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று முன்தினம் நள்ளிரவே அருவிகளில் குளிக்க ஐயப்ப பக்தர்கள் திரண்டனர். ஆனால் காலை 6 மணிக்கே அனுமதி வழங்கப்பட்டது.

    கொரோனா வழிகாட்டு முறையை கடைபிடிக்க பேரூராட்சி மற்றும் சுகாதார துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    மெயினருவியின் நுழைவுவாயிலான ஆர்ச் பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை நிறுத்தி, 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றி தழ்கள் சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து சுகாதார அலுவலர்கள் தடுப்பூசி சான்றிதழ்களை மீண்டும் ஆய்வு செய்தனர்.

    அருவிக்கரையில் செயல் அலுவலர் மாணிக்கராஜ், சுகாதார ஆய்வாளர் ராஜகணபதி மேற்பார்வையில் பேரூராட்சி பணியாளர்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் உடல் வெப்பநிலை சரி பார்த்த பின்னர் சானிடைசர் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதே போல் பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலியருவியிலும் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது.

    மெயினருவியில் முதல் நாளான நேற்று சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் என 20 ஆயிரம் பேர் குளித்து சென்றுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. 2-ம் நாளான இன்றும் குற்றாலம் அருவிகளில் குளிக்க ஏராளமானவர்கள் திரண்டனர். அவர்கள் காலை 6 மணி முதல் குறிப்பிட்ட அளவில் பிரித்து குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    பிரதான வழிகளை தவிர வேறு வழிகளில் சுற்றுலா பயணிகள் சென்று குளிப்பதை தடுக்கும் பொருட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் நேரில் பார்வையிட்டார்.

    கொரோனா பரவல் காரணமாக தீவிரமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் குற்றாலத்தில் 8 மாதங்களுக்கு பின்னர் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் அவர்கள் அருவிகளில் குளித்து மகிழ்ந்து குடும்பத்துடன் பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.



    Next Story
    ×