search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றாலம் அருவி"

    • பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நள்ளிரவு தொடங்கி பலத்த மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் தொழிலாளர்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

    ஊத்து எஸ்டேட்டில் அதிகபட்சமாக இன்று காலை நிலவரப்படி 28 மில்லிமீட்டரும், நாலுமுக்கு, காக்காச்சியில் தலா 21 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இன்று காலை பரவலாக மழை பெய்தது. பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    பாபநாசத்தில் அதிகபட்சமாக 58 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 38 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 24 மில்லிமீட்டரும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 26.80 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மாநகர் பகுதியில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையிலும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மாநகர் பகுதி முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. ஒரு சில இடங்களில் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது.

    மாவட்டத்தில் சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. அங்கு 28 மில்லிமீட்டர் மழை பதிவானது. பாளையில் 2 மில்லிமீட்டரும், நெல்லையில் 4.20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் லேசான சாரல் அடித்தது. களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிக்கரைகளில் சாரல் மழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை கடனா அணையில் 3 மில்லிமீட்டரும், ராமநதியில் 9 மில்லிமீட்டரும், குண்டாறில் 1 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 5 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நள்ளிரவு தொடங்கி பலத்த மழை பெய்தது. இன்று காலை வரையிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. பாவூர்சத்திரம், சுரண்டை, வி.கே.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கன மழை சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக கொட்டியது.
    • குற்றாலத்தின் பிரதான அருவிகளான பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    தென்காசி:

    தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கன மழை சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக கொட்டியது. இதனால் தென்காசியின் கூலகடை பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் மழைநீர் செல்ல முடியாமல் சாக்கடை நீர் கலந்து தெருக்களில் சூழ்ந்து நின்றதால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

    மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை பெய்ததால் குற்றாலத்தின் பிரதான அருவிகளான பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நீண்ட நாட்களாக வறண்டு காணப்பட்ட குற்றால அருவிகளில் தற்போது பெய்த மழையின் காரணமாக தண்ணீர் மிதமான அளவில் விழ தொடங்கியுள்ளதால் அதில் ஆனந்த குளியல் போட சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.

    • விஜயகாந்திடம் அப்போது சினிமா ஆர்வமோ, அரசியல் ஆர்வமோ இருந்தது இல்லை.
    • சினிமாவில் நடிக்க தொடங்கிய பின்னர் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கும் எங்களை அழைத்துச் சென்றுள்ளார்.

    நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பள்ளியிலும் விஜயகாந்த் படித்துள்ளார். அங்குள்ள புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் 1966-ம் ஆண்டு 9 மற்றும் 10-ம் வகுப்பை படித்த விஜயகாந்த்தின் பள்ளி தோழர் பால சுப்பிரமணியம் அவருடனான நட்பை மலரும் நினைவுகளாக பகிர்ந்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, "விஜயகாந்த்துடன் ஒரே பெஞ்சில் தான் அமர்ந்து படித்துள்ளேன். ராமலிங்கம், ஜெயச்சந்திரன் ஆகிய மாணவர்களும் எங்களோடு அமர்ந்து படித்துள்ளனர். விஜயகாந்திடம் அப் போது சினிமா ஆர்வமோ, அரசியல் ஆர்வமோ இருந்தது இல்லை. அனைத்து நண்பர்களிடமும் சகஜமாக பேசி பழகும் குணம் கொண்டவராக திகழ்ந்த விஜயகாந்த்துடன் குற்றால அருவியில் போய் குளித்துள்ளோம். பாபநாசம், தாமிரபரணி ஆற்றிலும் குளியல் போட்டு உள்ளோம். எனது வீட்டில் இருந்து நான் எடுத்துச் சென்ற உணவுகளையெல்லாம் ருசித்து சாப்பிட்டுள்ளார். சினிமாவில் நடிக்க தொடங்கிய பின்னர் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கும் எங்களை அழைத்துச் சென்றுள்ளார்.

    பொள்ளாச்சியில் மின் வாரியத்தில் நான் பணியாற்றிய போதும் படப் பிடிப்பில் பங்கேற்றுள்ளேன். அவரது மரணம் மிகுந்த வேதனையை தருகிறது" என்றார்.

    • ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி ஐயப்ப பக்தர்களும் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.
    • மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் சற்று கூடுதலாக விழுவதால் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பணிக்கு போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

    தற்போது மழைப்பொழிவு குறைந்ததால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சற்று நீர்வரத்து குறைய தொடங்கி உள்ளது. இன்று காலை முதல் ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மற்ற அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி ஐயப்ப பக்தர்களும் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.

    ஆனால் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் சற்று கூடுதலாக விழுவதால் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. வெள்ளம் குறைந்தால் அங்கு இன்று மாலைக்குள் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய காட்டாற்று வெள்ளத்தால் பெண்கள் குளிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் தூண்கள், நடைமேடைகளில் அமைக்கப்பட்டு இருந்ததால் செங்கல்கள் பெயர்ந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலத்த சேதம் அடைந்தது .

    அருவிக்கரையை சுற்றிலும் பொதுமக்கள் நின்று குளிக்கும் பகுதிகளில் அருவியில் அடித்து வரப்பட்ட கற்கள், மரத்துண்டுகள், மண் குவியல்கள் ஆகியவற்றை துப்புரவு பணியாளர்களை கொண்டு அகற்றும் நடவடிக்கையில் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

    • ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தென்காசி:

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    தென்காசி மாவட்டத்தில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கிய நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இருப்பினும் பெரிய வெள்ளம் ஏற்படாததால் காலை 10 மணி வரையில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

    அதன் பின்பு மழைப் பொழிவு தொடர்ந்து அதிகரித்ததால் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவியில் காட்டாற்று வெள்ளத்தால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பழைய குற்றாலத்திலும் வெள்ளப்பெருக்கு மற்றும் மெயின் அருவியில் பாது காப்பு வளைவை தாண்டி பெருவெள்ளம் ஏற்பட்ட தால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்களுக்கு உடனடியாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    மேலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    • மழை இல்லாததால் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்தும் சற்று குறைய தொடங்கியுள்ளது.
    • குற்றாலம் மெயின் அருவியில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் குளித்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை இல்லாததால் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்தும் சற்று குறைய தொடங்கியுள்ளது.

    ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் மிதமாக விழும் தண்ணீரில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளை காட்டிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

    சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து வரும் நிலையில் தென்காசி மாவட்டம் வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் பலரும் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் புனித நீராடி குற்றாலநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்து சபரிமலைக்கு செல்லும் வழக்கத்தை கொண்டிருப்பதால் அருவிகளில் குளிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் குளித்தனர். 

    • கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    • சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் புனித நீராட குவிந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    மேலும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் புனித நீராட குவிந்தனர்.

    இன்று காலை முதலே அருவி கரைகளில் நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் சுற்றுலா பயணி களின் வருகை அதி கரித்ததன் காரணமாக அருவிக் கரைகளில் அமைந்துள்ள கடைகளில் பழங்கள் உணவுப் பொருட்களின் விற்பனை யானது அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.
    • பாவூர்சத்திரத்திற்கு தென்பகுதியில் அமைந்துள்ள குளத்து பாசனத்தை நம்பி இருக்கும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று முதல் போதிய அளவு மழை இல்லாததால் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வரும் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.

    கடந்த சில நாட்களாக குற்றால அருவிகளில் இருந்து வரும் தண்ணீர் மூலம் சிற்றாற்று பாசன வசதி பெரும் குளங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பியதால் தென்காசி, சுந்தரபாண்டியபுரம், மேலப்பாவூர், கீழப்பாவூர், நாகல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பியதால் அந்த குளங்களின் மூலம் பாசன வசதி பெறும் விவசாய நிலங்களில் நெல் நடவு செய்யும் பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

    அதேநேரம் பாவூர்சத்திரத்திற்கு தென் பகுதியில் நாட்டார்பட்டி, திப்பணம்பட்டி, ஆவுடையானூர், பண்டாரகுளம் உள்ளிட்ட கிராமங்களை சுற்றிலும் அமைந்துள்ள குளங்கள் நிரம்பாமல் புற்கள் மட்டுமே வளர்ந்து காணப்படுகின்றன.

    இதனால் பாவூர்சத்திரத்திற்கு தென்பகுதியில் அமைந்துள்ள குளத்து பாசனத்தை நம்பி இருக்கும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஜம்பு நதியின் மேல்மட்ட கால்வாய் பணிகள் தொடங்கப்பட்ட பொழுதிலும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் இருப்பதால் போதிய மழை இருந்தும் தங்கள் பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பாமல் தாங்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    எனவே ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் பணிகளை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டு நிரம்பாத குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து விவசாயிகளை வாழ வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகபட்சமாக குண்டாறு அணையில் 3.5 மில்லிமீட்டர் மழை பெய்தது.
    • பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்டவற்றில் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்கின்றனர்.'

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் கடந்த சில நாட்களாக மழை சற்று குறைந்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது. பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணையின் நீர்மட்டம் அரை அடி உயர்ந்து 107.40 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 857 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 504 கனஅடி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. சேர்வலாறில் 119.62 அடியும், மணிமுத்தாறில் 74.85 அடியும் நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 376 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    மாவட்டம் முழுவதும் இந்த மாதத்தில் 249 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கமான மழை அளவை விட 19.59 சதவீதம் கூடுதலாகும். இந்த ஆண்டில் கடந்த அக்டோபர் மாதம் வரை மாவட்டம் முழுவதும் 367.33 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் பிசான பருவ நெல் நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றுப்படுகையை ஒட்டி அமைந்துள்ள வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, முக்கூடல், கோபாலசமுத்திரம், சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் குண்டாறு மற்றும் கருப்பாநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக குண்டாறு அணையில் 3.5 மில்லிமீட்டர் மழை பெய்தது. இன்று காலையில் சிவகிரி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் மழை குறைந்ததால் அருவிகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்து தண்ணீர் மிதமாக விழுகிறது. இதனால் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்டவற்றில் அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்கின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதியம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பருவமழை காரணமாக வானம் பார்த்த பூமியான பல்வேறு இடங்களில் குளிர்ந்துள்ளன. இதன்காரணமாக அப்பகுதிகளில் வெண்டை, சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர் வகைகள் பயிரிடப்பட்டுள்ளன.

    தற்போது புதியம்புத்தூர் அருகே குப்பனாபுரம் பகுதியில் மக்காச்சோளப்பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. இவை விவசாயிகளுக்கு அதிக பலன் தரும் வகையில் இருப்பதால் அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். விரைவில் அவை அறுவடையாகும்.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.
    • கனமழையால் புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழை நீர் தேங்கி நிற்கின்றது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    நேற்று மழை சற்று குறைந்த நிலையில் நெல்லை, டவுன், வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இன்று காலை மழை முதல் பெய்து வருகிறது. இதேபோல் திசையன்விளை, பணகுடி, ராதாபுரம், நாங்குநேரி, நம்பியாறு உள்ளிட்ட புறநகர் மாவட்ட பகுதியிலும் மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை அதிகபட்சமாக சூரன்குடியில் 80 மல்லிமீட்டர் மழை பதிவானது.

    இந்நிலையில் பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி இருந்து வகுப்புகள் நடத்த உகந்த சூழல் இல்லாத நிலை ஏற்பட்டாலோ, அல்லது சில இடங்களில் கனமழை பெய்தாலோ அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

    நெல்லை அருகே உள்ள தேவர்குளம் சுற்றுவட்டார பகுதிகளான மேலஇலந்தைகுளம், சுண்டங்குறிச்சி, பன்னீரூத்து, மூவிருந்தாளி, அச்சம்பட்டி, புளியம்பட்டி மற்றும் தென்காசி மாவட்ட பகுதிகளான கரிசல்குளம், களப்பாலங்குளம், மேல நீலிதநல்லூர், குருக்கள்பட்டி, கோ.மருதப்பபுரம், பனவடலிசத்திரம், கீழநீலிதநல்லூர், நெடுங்குளம், கொக்குகுளம், சாயமலை, வலசை ஆகிய பகுதிகளில் தொடர்மழை காரணமாக பல்வேறு குளங்கள் நிரம்பி கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மூவிருந்தாளி கிராமத்தில் உள்ள பெரியகுளம் நிரம்பி மறுகால் சென்றது. இதில் இருந்து வெளியேறிய தண்ணீர் அதிகமாக சென்றதால் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதனால் அங்குள்ள சுமார் 200 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. 6 வீடுகள் சேதமடைந்து உள்ளது. மேலும் பல்வேறு குளங்களில் இருந்து வெளியேறிய காட்டாற்று வெள்ளம் மேலஇலந்தைகுளம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்றது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் நெல்லை சந்திப்பு பஸ்நிலையம், டவுன், மேலப்பாளையம் குறிச்சி, பாளையங்கோட்டையில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. லூர்தம்மாள்புரம், ஸ்டேட் வங்கி காலனி, கலைஞர் நகர், பால்பாண்டி நகர், ராஜீவ் நகர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வீடுகளை சூழ்ந்து உள்ளது.

    திரு.வி.க. நகர், இந்திரா நகர் பகுதிகளிலும் மழைநீர் தேங்கி உள்ளது. அந்த பகுதியில் ஒரு சில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மோட்டார்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தூத்துக்குடி கீழுர் ரெயில் நிலையத்தில் மழைநீர் தேங்கியது. தண்டவாளம் மழைநீரில் மூழ்கி இருந்தது.

    கயத்தாறு திருமங்களக்குறிச்சி பஞ்சாயத்தில் பெரியசாமிபுரம் கிராமத்தில் விவசாயிகள் சுமார் 300 மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் மக்காசோளப்பயிர் பயிரிட்டுள்ளனர். இங்கு பூ பூத்துள்ள தொடர் மழையில் மக்காசோளப்பயிர்களில் மழைநீர் இரண்டு அடி உயரம் தேங்கிய நிலையில் இப்பகுதியில் நேற்று மாலையில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. இதில் 250 ஏக்கர் மக்காச்சோளம், 50 ஏக்கர் உளுந்து பயிர் ஆகியவை நொடிந்து விழுந்தது.

    கனமழையால் புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழை நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் நோயாளிகள் அவதியடைந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே உடனடியாக அதனை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மாவட்ட நிர்வாகங்கள், மாநகராட்சி, நகராட்சி சார்பில் தேங்கிய இடங்களில் மழைநீரை அகற்றும் பணி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. பாபநாசம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 844.155 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து 504.75 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. 143 கொள்ளளவு கொண்ட அணையில் இன்று 105.75 அடியாக உயர்ந்து உள்ளது. அதேபோல் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 72.35 அடியில் இருந்து நேற்று 73.45 அடியாவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 118.04 உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்து வருகிறது. இதனால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் அருவிகளில் குளிக்க திரண்டனர்.

    • குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.
    • மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் தொடர் மழையால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில் நேற்று சாரல் அடித்தது.

    புறநகர் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்படைந்தது. அங்கு 22 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதே நேரத்தில் அங்கு விவசாய பணிகள் மும்முரம் அடைந்துள்ளது.

    நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்றும் காலை முதலே ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்கிறது. களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அங்கு 41.60 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாநகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.

    அணைகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு அணை, மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நம்பியாறு அணை பகுதியில் 24 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 93.40 அடியையும், சேர்வலாறு அணை 107.87 அடியையும் எட்டியுள்ளது. அந்த அணைகளுக்கு வினாடிக்கு 1132 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து 104 கனஅடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 64.20 அடியாக உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி, சிவகிரி ஆகிய இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. அணைகளை பொறுத்த வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வேகமாக அதிகரித்து வருகிறது. குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

    84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையில் நீர் இருப்பு 76 அடியாக உயர்ந்துள்ளது. இன்னும் 8 அடி நீர் உயர்ந்தால் அணை நிரம்பிவிடும். அந்த அணைக்கு வினாடிக்கு 133 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 73.50 அடியாக உள்ளது. அங்கு 216 கனடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.28 அடியாக உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் தொடர் மழையால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து இருப்பதாலும், இன்று விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு படையெடுத்துள்ளனர். மெயினருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் ஓரமாக நின்று குளித்து மகிழ்ந்தனர்.

    • குற்றாலம் மெயின் அருவியில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவி நீரில் மண் மற்றும் கற்கள் அடித்து வரப்பட்டது.
    • உரிய நேரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை விதித்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய 3 அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்வரத்து அதிக அளவில் காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி போலீசாரால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    குற்றாலம் மெயின் அருவியில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவி நீரில் மண் மற்றும் கற்கள் அடித்து வரப்பட்டது. அருவி பகுதியில் அமைந்துள்ள இரும்பினால் ஆன காவல் கண்காணிப்பு மையம் தூக்கி வீசப்பட்டு பாதுகாப்பு கம்பிகள் சேதம் அடைந்து காணப்படுகிறது.

    உரிய நேரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை விதித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ள நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அவை ஒவ்வொன்றாக நிரம்பும் தருவாயை எட்டியுள்ளன.

    ×