என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குற்றால அருவிகளில் 4-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்து வருவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று 4-வது நாளாக தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றும், இன்று காலையும் மழைப்பொழிவு சற்று குறைந்துள்ளதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கும் சற்று தணிந்து காணப்படுகிறது.
இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்காக வந்த நிலையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக அருவி கரையையொட்டி அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் அனைத்தும் சேதமடைந்து ஆங்காங்கே உடைந்து தொங்கிக் கொண்டுள்ளன.
குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி பகுதிகளில் தடுப்பு கம்பிகள் மற்றும் தரைதளம் பலத்த சேதமடைந்துள்ளது. இன்று காலையில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிதமாக விழத்தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேதம் அடைந்த தடுப்பு கம்பிகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.






