என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

களைகட்டிய சீசன் - குற்றாலத்தில் அலைமோதிய சுற்றுலாப்பயணிகள் கூட்டம்
- ஐந்தருவி மற்றும் மெயின் அருவி பகுதியில் மிதமான சாரல் மழை பெய்தது.
- குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது.
கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக குற்றாலம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் போதிய மழை இல்லாததால் அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து சற்று குறைந்து காணப்பட்டது.
எனினும் அருவிகளில் குளிக்க உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.
நேற்று மாலையில் ஐந்தருவி மற்றும் மெயின் அருவி பகுதியில் மிதமான சாரல் மழை பெய்தது. குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் குற்றாலத்தில் இதமான சூழ்நிலை காணப்படுகிறது. இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
குற்றால சாரல் திருவிழா வரும் 19-ந் தேதி தொடங்க உள்ள நிலையில் சாரல் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளிலும் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக இறங்கி உள்ளது.






