search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கொலை
    X
    கொலை

    கொலை வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகி விட்டு பஸ்சில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை

    கொலை வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகி விட்டு பஸ்சில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் அரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் மதுரை மேலஅனுப்பானடியைச் சேர்ந்த தர்மலிங்கம், அவரது மகன் பழனிக் குமார் மற்றும் வழிவிட்டான், அழகுமுருகன், முத்துமுருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் வழக்கு விசாரணைக்காக ராமநாதபுரம் சிறார் நீதி மன்றத்தில் ஆஜராகி வருகின்றனர்.

    நேற்று விசாரணைக்கு ஆஜரான அவர்கள் பின்னர் பஸ்சில் ஊருக்கு புறப்பட்டனர். அந்த பஸ் பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது பின்னால் வந்த கார், பஸ்சை வழிமறித்தது. இதனால் பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.

    அப்போது காரில் இருந்து ஹெல்மெட் அணிந்தபடி 6 பேர் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கீழே இறங்கினர்.அவர்கள் பஸ்சுக்குள் திபு...திபு....வென புகுந்து அங்கிருந்த அழகுமுருகன் உள்பட 4 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

    இதனை பார்த்த பயணிகள் அலறியடித்தபடி அங்கிருந்து ஓடினர். 4 பேரும் ரத்த வெள்ளத்தில் மயங்கியதும் மர்ம கும்பல் பஸ்சில் இருந்து இறங்கி தாங்கள் வந்த காரிலேயே தப்பி சென்றது. இந்த சம்பவம் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பரமக்குடி டவுன் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து வெட்டுக்காயத்துடன் கிடந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அழகுமுருகன் பரிதாபமாக இறந்தார். முத்துமுருகன் டிஸ்சார்ஜ் ஆகிவிட்ட நிலையில் பழனிக் குமார், வழிவிட்டான் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக பரமக்குடி டவுன் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலையாளிகள் யார்? மணிகண்டன் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடந்துள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×