search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மையம்
    X
    வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

    இலங்கை கடலோரப்பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் தீபாவளி வரை 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்.

    இன்று முதல் 2-ந்தேதி வரை டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும்.

    மழை

    கன்னியாகுமரி, புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும்.

    3 மற்றும் 4-ந்தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும்.

    ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரில் நேற்றிரவு முதல் இன்று வரை விட்டு விட்டு அவ்வப்போது மழை பெய்தது.

    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):-

    பரங்கிப்பேட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நன்னிலம், திருவாரூர், மணமேல்குடி, தலா 5 செ.மீ, தேவக்கோட்டை, காரைக்குடி, ராமேஸ்வரம், மண்டபம் தலா 4 செ.மீ, திருவாடானை, ஸ்ரீபெரும்புதூர், அறந்தாங்கி, தொண்டி, திருப்பூண்டி, வேதாரண்யம், கொடவாசல், பாண்டவையார், திருவாரூர், கன்னியாகுமரி, தாமரைப்பாக்கம், அரிமளம், கொள்ளிடம், திருத்துறைப்பூண்டி, பொன்னேரி, கொட்டாரம், தரங்கம்பாடி ரூமங்கலம், பட்டுக்கோட்டை, கல்லந்திரி தலா 3 செ.மீ மழை பெய்துள்ளது.

    குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×