search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி மாணவிகள்
    X
    பள்ளி மாணவிகள்

    மழை பாதிப்பு மாவட்டங்களில் 8-ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு

    தனியார் பள்ளிகள் பொறுத்தமட்டில் ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்பும், ஒரு சில பள்ளிகளில் தினமும் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணிவரை மட்டும் வகுப்புகளை நடத்தி மாணவர்களை வீட்டிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை மறுநாள் (நவம்பர் 1-ந் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவிகள் தொற்று பரவாமல் தடுக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. வகுப்பறைகள் மற்றும் இருக்கைகள், கழிப்பிடம் போன்றவை சுத்தம் செய்யப்படுகிறது.

    ஒரு வகுப்புக்கு 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் சுழற்சி முறையில் ஒருநாள் விட்டு ஒருநாள் மாணவர்கள் பள்ளிக்கு அழைக்கப்படுகிறார்கள். கிருமிநாசினி மற்றும் முககவசங்களை வழங்கவும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதனால் அனைத்து அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு திறப்பதற்கு தயாராக உள்ளன.

    மழை

    இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தற்போது நடந்து வரும் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

    பள்ளிகள் திறந்த 2 நாட்களில் தீபாவளி பண்டிகை வருவதால் பெரும்பாலான பெற்றோர்கள் பண்டிகை கழித்தே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடியவர்கள் பண்டிகை முடிந்த பின்னர் பள்ளிக்கு வர ஏதுவாக ஒரு சில தனியார் பள்ளிகளில் 8-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் திட்டமிட்டபடி 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் பள்ளிகளை திங்கட்கிழமை திறப்பதற்கான ஆயத்த பணிகளை செய்து வருகிறார்கள்.

    பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில் இறுதிகட்ட பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்போது ஒரு சில மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பள்ளிகளை திறப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் பள்ளிக்கு வருவதில் சிக்கல் இருப்பதால் மழை பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் பள்ளிகளை வருகிற 8-ந் தேதி திறக்க முடிவு செய்யப்படுகிறது.

    தொடர் மழையால் பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்கி நிற்கின்றது. அதனால் மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதில் பல்வேறு பாதிப்புகள் வரக்கூடும் என்பதால் அந்த மாவட்டங்களில் தீபாவளிக்கு பின்னர் பள்ளிகளை திறக்க ஆலோசிக்கப்படுகிறது.

    மழை பாதிப்புள்ள மாவட்ட கலெக்டர்களின் அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதுகுறித்து நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலே‌ஷன் பள்ளிகளின் சங்க பொது செயலாளர் கே.ஆர்.நந்த குமார் கூறியதாவது:-

    அரசின் உத்தரவின்படி நவம்பர் 1-ந் தேதி தனியார் பள்ளிகளை திறக்க தயாராக இருக்கின்றோம். ஆனால் மழையால் பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட் டுள்ளது. அதனால் அந்த மாவட்டங்களில் தீபாவளிக்கு பின்னர் 8-ந் தேதி பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளோம்.

    தீபாவளிக்கு முந்தைய இரண்டொரு பள்ளி வேலை நாட்களால் மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பதால் பெற்றோர்கள் விருப்பத்தின் அடிப்படையில் மாணவர்களை பள்ளிக்கு அழைக்கின்றோம். 1-ந் தேதி மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது பெற்றோர்களின் விருப்பத்துக்கு விடப்பட்டுள்ளது.

    தனியார் பள்ளிகளை பொறுத்தமட்டில் ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்பும், ஒரு சில பள்ளிகளில் தினமும் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணிவரை மட்டுமே வகுப்புகளை நடத்தி மாணவர்களை வீட்டிற்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×