search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திற்பரப்புக்கு வந்த சுற்றுலா பயணிகள் தற்காலிக தடுப்பு வேலி அருகில் நின்று அருவியின் அழகை ரசிக்கும் காட்சி.
    X
    திற்பரப்புக்கு வந்த சுற்றுலா பயணிகள் தற்காலிக தடுப்பு வேலி அருகில் நின்று அருவியின் அழகை ரசிக்கும் காட்சி.

    குளிக்க நீடிக்கும் தடையால் திற்பரப்பு அருவியை ஏக்கத்துடன் பார்த்து திரும்பும் சுற்றுலா பயணிகள்

    திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் தற்காலிக வேலி வழியாக அருவியை ஏக்கத்துடன் பார்த்துவிட்டு திரும்புகிறார்கள்.
    திருவட்டார்:

    குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவி முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இங்கு அருவிப்பகுதியில் நீச்சல்குளம், சிறுவர் பூங்கா, படகு சவாரி என ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன. மேலும் அருவியின் அருகே 12 சிவாலயங்களில் ஒன்றான திற்பரப்பு மகாதேவர் கோவில் உள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அருவியின் அருகில் உள்ள சிறுவர் நீச்சல் குளத்தையொட்டி இருந்த இரும்பு கிரில் கைப்பிடி முழுமையாக வளைந்துள்ளது. மேலும் கல்மண்டபம் எதிரில் உள்ள பாதையில் கற்கள் பெயர்ந்துள்ளது. இதனால் கல்மண்டபத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திற்பரப்பு அருவியில் 6 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. அருவிக்கு செல்லும் பாதையில் கம்பு மற்றும் கம்பியால் தற்காலிக வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், திற்பரப்புக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியின் அருகே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் தடுப்புவேலியின் அருகில் நின்று அருவியின் அழகை ரசித்து விட்டு குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்ப செல்கிறார்கள்.

    அதேவேளை அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், அருவியின் மேல்பகுதியிலும், கீழ்பகுதியிலும் ஓடும் கோதையாற்றில் குளிப்பதற்கு எந்தவித தடையும் இல்லை. இதனால், அருவியில் குளிக்க முடியாத சுற்றுலா பயணிகள் ஆற்றிலும், தடுப்பணையிலும் குளித்து விட்டு திரும்புகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் பிற சுற்றுலாதலங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், திற்பரப்பு அருவியிலும் குளிப்பதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×