search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை செயலாளர் இறையன்பு
    X
    தலைமை செயலாளர் இறையன்பு

    அரசியல் சர்ச்சையாக வெடித்த கடிதம் விவகாரம்- தலைமை செயலாளர் இறையன்பு விளக்கம்

    திட்டங்கள், செயலாக்கங்கள் குறித்து தகவல்களை திரட்ட அறிவுறுத்துவது நிர்வாகத்தில் வழக்கமான நடைமுறைதான் என்று தலைமை செயலாளர் இறையன்பு கூறி உள்ளார்.
    சென்னை:

    தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி கடந்த 18-ந்தேதி பதவி ஏற்றார். ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் நாகாலாந்து மாநிலத்தில் இதற்கு முன்பு கவர்னராக பணியாற்றினார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற கவர்னர் ஆர்.என். ரவி, பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மூத்த மத்திய மந்திரிகளை சந்தித்து பேசிவிட்டு வந்தார்.

    இந்தநிலையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து கொள்ள அதிகாரிகள், தனக்கு விளக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி, தலைமைச் செயலாளர் இறையன்புக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    கவர்னரின் சார்பில் அவரது செயலாளர் எழுதி உள்ள அந்த கடிதத்தை மேற்கோள் காட்டி தலைமைச் செயலாளர் இறையன்பு, ஒவ்வொரு துறை அதிகாரிகளுக்கும் இதுகுறித்து கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

    தமிழக கவர்னர் மாநிலத்தில் உள்ள சில துறைகளின் செயல்பாடுகள் மற்றும் அதன் தற்போதைய நலத்திட்டங்கள் மற்றும் மாநில மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் பற்றி அறிய விரும்புகிறார்.

    கவர்னரிடம் உங்கள் துறையின் மாநிலம் மற்றும் மத்திய அரசு ஆகிய இரண்டின் தற்போதைய நலத்திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலே கூறப்பட்ட நோக்கத்திற்காக கம்ப்யூட்டர் பவர் பாயின்ட் விளக்கக் காட்சியும் தயாரித்து வைத்து இருக்க வேண்டும். அவ்வாறு தயாரிக்கப்பட்ட பவர் பாயின்ட் விளக்கக் காட்சிக்கு முன்பு விவாதிக்கப்பட வேண்டும். இதற்கான தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் இறையன்பு குறிப்பிட்டுள்ளார்.

    இதன்படி அனைத்து துறை செயலாளர்களும் அவரவருக்கு ஒதுக்கப்படும் நாட்களில் கவர்னர் மாளிகைக்கு சென்று துறை ரீதியாக கவர்னரிடம் விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக கவர்னர்

    இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி கொடுப்பாரா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

    அ.தி.மு.க. ஆட்சியின்போது தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் மாவட்டந்தோறும் சென்று ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை துவக்கும் விதமாக குப்பைகளை சுத்தம் செய்தார். இந்த நிகழ்ச்சிக்கு அவர் ஒவ்வொரு மாவட்டமாக சென்றபோது அதிகாரிகளுடன் ஆய்வும் மேற்கொண்டார். இதற்கு தி.மு.க. சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு கருப்புக்கொடி போராட்டமும் நடத்தப்பட்டது.

    அதை பொருட்படுத்தாமல் முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தூய்மை பணியை மேற்கொண்டார். இந்த சூழலில் இப்போது தமிழக கவர்னராக வந்துள்ள ஆர்.என்.ரவி துறை வாரியாக திட்டங்களை தெரிந்து கொள்ள அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    இது அரசியலில் பெரும் விவாதத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    * அனைத்துத்துறை செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் விவாதப்பொருளாக மாறி இருப்பது சரியல்ல.

    * திட்டங்கள், செயலாக்கங்கள் குறித்து தகவல்களை திரட்ட அறிவுறுத்துவது நிர்வாகத்தில் வழக்கமான நடைமுறைதான்.

    * புதிதாக பொறுப்பேற்றுள்ள கவர்னருக்கு அரசின் திட்டங்கள் குறித்து தெரிவிக்கவே தரவுகள் திரட்டல்.

    * அலுவல் ரீதியாக அனுப்பப்பட்ட கடிதத்தை அரசியல் சர்ச்சையாக்குவது சரியானது அல்ல.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    இதையும் படியுங்கள்...வருகிற சனிக்கிழமை 7-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    Next Story
    ×