search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IraiAnbu"

    • இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கப் போவதாக இறையன்பு அறிவித்திருக்கிறார்.
    • இறையன்பு, மது, புகையிலை, போதைப் பொருட்களின் தீமைகளில் இருந்து இளைஞர்களை காப்பதற்காக அவர் வழியில் பரப்புரை செய்ய வேண்டும்.

    சென்னை :

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள வெ.இறையன்பு, எந்த அரசு பதவியையும் ஏற்கப்போவதில்லை என்றும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். அவர் எடுத்திருப்பது மிகவும் சரியான முடிவு. அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்.

    இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நலனில் அக்கறைக் கொண்டிருக்கும் வெ.இறையன்பு, மது, புகையிலை, போதைப் பொருட்களின் தீமைகளில் இருந்து இளைஞர்களை காப்பதற்காக அவர் வழியில் பரப்புரை செய்ய வேண்டும்; பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த சிவ்தாஸ் மீனா 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியானார்.
    • கடந்த சில நாட்களாக புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி வந்தது.

    சென்னை:

    தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

    இந்நிலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை பணியில் நீடிப்பார்.

    நகராட்சி நிர்வாகம்-நீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா தற்போது தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த சிவ்தாஸ் மீனா 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியானார்.

    கடந்த சில நாட்களாக புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

    • தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற்றவுடன், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
    • சைலேந்திரபாபு டி.என்.பி.எஸ்.சி. தலைவராகலாம் என தெரிகிறது.

    சென்னை:

    தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வருகிற 30-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதே நாளில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் ஓய்வு பெறுகிறார்.

    இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார்? புதிய டி.ஜி.பி. யார்? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    சென்னை போலீஸ் கமிஷனராக உள்ள சங்கர் ஜிவால் புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுவார் என தெரிகிறது.

    ஆனாலும் இந்த பட்டியலில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பெயர்கள் உள்ளதால் அதில் ஒருவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்து அறிவிப்பார்.

    அதே போல் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

    அதாவது தற்போதைய தமிழக அரசின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பட்டியலில் முதலிடத்தில் 1986-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஹன்ஸ்ராஜ் வர்மா. இவர் தற்போது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக தலைவராக உள்ளார்.

    அடுத்தது, 1989ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான எஸ்.கே.பிரபாகர். இவர் தற்போது வருவாய்த் துறையின் கீழ் வரும் வருவாய் நிர்வாக ஆணையராக உள்ளார்.

    மூன்றாவது, இதே 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவ்தாஸ் மீனா. இவர் தற்போது நகராட்சி நிர்வாகத்துறை செயலராக உள்ளார்.

    இவர்களில் பெரும்பாலும் சிவ்தாஸ் மீனாவே தமிழக அரசின் அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற்றவுடன், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் சைலேந்திரபாபு டி.என்.பி.எஸ்.சி. தலைவராகலாம் என தெரிகிறது.

    • தலைமைச் செயலாளர் பதவிக்கான பட்டியலில் சீனியராக ஹன்ஸ்ராஜ் வர்மா உள்ளார்.
    • மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்கு செயலாளர்களில் ஒருவராக சிவ்தாஸ் மீனா பணிபுரிந்து உள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளரான இறையன்பு மற்றும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகிய இருவரும் ஜூன் 30-ந் தேதி ஓய்வு பெறுகின்றனர்.

    இதனால் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? டி.ஜி.பி.யாக யார் வருவார்? என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது.

    தலைமைச் செயலாளர் பதவிக்கான பட்டியலில் சீனியராக ஹன்ஸ்ராஜ் வர்மா உள்ளார். இவர் தற்போது தொழில் முதலீட்டு நிறுவனத்தில் (டிக்) கூடுதல் தலைமைச் செயலாளராக உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான சிவ்தாஸ் மீனா உள்ளார். மேலும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.

    இவர்களது பட்டியலை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. இதில் 3 பேர் பெயர்களை தேர்ந்தெடுத்து மத்திய அரசு அனுப்பி வைக்கும். அதில் ஒருவரை தமிழக அரசு தேர்ந்தெடுத்து நியமனம் செய்யும்.

    அந்த வகையில் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனாவை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவ்தாஸ் மீனா, ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தவர். ஜெய்ப்பூரில் மாளவியா பிராந்திய பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் படித்தவர். ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலை பட்டம் பெற்றவர். 30 ஆண்டுகள் ஐ.ஏ.எஸ். பணியில் அனுபவம் வாய்ந்தவர்.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்கு செயலாளர்களில் ஒருவராக சிவ்தாஸ் மீனா பணிபுரிந்து உள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது சிவ்தாஸ் மீனா மத்திய அரசு பணிக்கு சென்றுவிட்டார்.

    அதன் பிறகு மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானதும் சிவ்தாஸ் மீனா தமிழக பணிக்கு திரும்பினார். தற்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியாற்றி வருகிறார்.

    தமிழக டி.ஜி.பி.யாக உள்ள சைலேந்திரபாபு ஜூன் 30-ந்தேதி ஓய்வுபெறும் நிலையில் அந்த பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. அதிகாரமிக்க இந்த பதவிக்கு சென்னை போலீஸ் கமிஷனராக உள்ள சங்கர் ஜிவால் பெயர் அடிபடுகிறது.

    புதிய டி.ஜி.பி.யாக நியமிக்க 3 மாதங்களுக்கு முன்பே மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு 5 பேர் கொண்ட பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும். அதில் மத்திய அரசு 3 பேர் பட்டியலை தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கும். அதில் ஒருவர் டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுவார்.

    அந்த வகையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் டி.ஜி.பி.யாக வர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    சீனியாரிட்டி அடிப்படையில் 1988-ம் வருட தமிழக பேட்ச் அதிகாரி சஞ்சய் அரோரா, 1990 பேட்ச் அதிகாரிகளான சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் (முன்னாள் போலீஸ் கமிஷனர்) ஆபாஷ்குமார் சீனா அகர்வால் 1991 பேட்ச் அதிகாரி அமரேஷ் புஜாரி ஆகியோரும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தூய்மைப் பணியாளர்களுக்கு செய்து கொடுத்த வசதிகளை ஆவணப்படுத்தி நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை விரைந்து சமர்ப்பித்தமைக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • பொதுமக்களுக்கான கழிவறைகள் இல்லாத அரசு அலுவலகங்களில் அதனை உடனடியாக ஏற்படுத்தி கழிவறைகள் இல்லாத அரசு அலுவலகங்களே இல்லை என்ற சூழலை உருவாக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

    எழில்மிகு அரசு அலுவலகம் என்ற சூழலை உருவாக்க அரசு அலுவலகங்களில் செலவின்றி மேற்கொள்ளப்பட வேண்டிய எளிமையான பணிகளைத் தெரிவித்து செயல்படுத்த கேட்டுக்கொண்டதற்கிணங்க அனைத்து மாவட்ட கலெக்டர்களும் மிக நேர்த்தியான முறையில் செயல்படுத்தி முந்தைய நிலையையும் தற்போதைய நிலையையும் நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை அனுப்பி வைத்தமைக்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதேபோல, நாம் அமர்ந்து பணியாற்றும் அரசு அலுவலகங்களையும் உபயோகப்படுத்தும் ஓய்வு அறைகளையும் நாள்தோறும் தூய்மைப்படுத்தி துலங்க செய்யும் தூய்மைப் பணியாளர்கள் அமர்ந்து இளைப்பாறவும் மதிய வேளைகளில் உணவருந்தவும் நீர்ப் பருகவும் போதிய வசதிகளைச் செய்து தருமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தனி கவனம் செலுத்தி தூய்மைப் பணியாளர்களுக்கு செய்து கொடுத்த வசதிகளை ஆவணப்படுத்தி நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை விரைந்து சமர்ப்பித்தமைக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேற்சொன்ன வசதிகள் தங்கள் அலுவலகத்தோடு நில்லாமல் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் இதர அரசு துணை அலுவலகங்களில் செயல்படுத்தும் முகத்தான் நேரடியாக தலையிட்டு தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் எழில்மிகு அரசு அலுவலகமாக திகழவும் அவ்வலுவலகத் தூய்மைப் பணியாளர்கள் அமர்ந்து இளைப்பாறவும் உணவருந்தவும் போதிய வசதிகளை அந்தந்த அரசு அலுவலகத் தலைமை அலுவலர்கள் மூலம் செய்து கொடுப்பதை உறுதி செய்து ஆவணப்படுத்தி நிழற்படங்களுடன் ஓர் அறிக்கை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் பொதுமக்களுக்கான கழிவறைகள் இல்லாத அரசு அலுவலகங்களில் அதனை உடனடியாக ஏற்படுத்தி கழிவறைகள் இல்லாத அரசு அலுவலகங்களே இல்லை என்ற சூழலை உருவாக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து ஆவணப்படுத்தி நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை அரசுக்கு விரைந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • திருவான்மியூரில் தலைமைச் செயலர் இறையன்பு ஆய்வு செய்த போது ஆகாயத்தாமரையை கூட இன்னும் அகற்றாமல், தூர்வாரும் பணிகள் முடிவடையாமல் இருந்ததை பார்த்து அவர் மனவேதனை அடைந்தார்.
    • இதனால் அங்கிருந்த அதிகாரிகளை தலைமைச் செயலாளர் கடிந்து கொண்டார்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 1000 கிலோமீட்டருக்கு மேல் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி மற்றும் பொதுப்பணி துறையின் சார்பில் நடைபெற்று வரும் இந்த பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முதல் இடமாக திருவான்மியூரில் உள்ள பக்கிங்காம் கால்வாய் பகுதியில் தலைமைச் செயலர் இறையன்பு ஆய்வு செய்த நிலையில், அடுத்ததாக பள்ளிக்கரணை பகுதியில் கால்வாய் இணைப்புக் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சீர்படுத்துவது, மதகுகளை ஒழுங்குபடுத்துவது, ஆகாயத்தாமரை அகற்றுவது போன்ற பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    திருவான்மியூரில் தலைமைச் செயலர் இறையன்பு ஆய்வு செய்த போது ஆகாயத்தாமரையை கூட இன்னும் அகற்றாமல், தூர்வாரும் பணிகள் முடிவடையாமல் இருந்ததை பார்த்து அவர் மனவேதனை அடைந்தார்.

    இதனால் அங்கிருந்த அதிகாரிகளை தலைமைச் செயலாளர் கடிந்து கொண்டார்.

    'நாம் இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்யவில்லை என்றால் நிச்சயமாக நம்மால் பருவமழையை எதிர்கொள்ள முடியாது.

    எனக்கு தெரியாதா? உங்கள் துறையை பற்றி.... நீங்கள் மனசு வைக்கவில்லை. நீங்கள் மனசு வைத்திருந்தால் இந்த பணி எப்போதோ முடிந்திருக்கும். இது ஒரே நாளில் பந்தல் போடும் துறையல்ல, வேலையும் அல்ல' என கூறினார்.

    மீண்டும் 7-ந் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் அப்போது பணிகள் சரி செய்யப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கண்டிப்புடன் கூறினார்.

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று 11 இடங்களில் நேரில் ஆய்வு செய்த தலைமைச் செயலர் இறையன்புடன் நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, சென்னை மாநகர ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மாநகராட்சி குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் உடன் சென்று இருந்தனர்.

    • வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை.
    • கோவை, மதுரை மற்றும் திருச்சி பாஸ்போர்ட் அலுவலக செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு.

    மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்கள் துறை செயலாளர் அவுசாஃப் சயீத், சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்புவை சந்தித்துப் பேசினார்.

    பாஸ்போர்ட் மற்றும் குடியேற்ற சேவைகள், தமிழக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், வெளிநாட்டு ஆட்சேர்ப்பில் சட்டவிரோத ஏஜெண்ட்களை தடுப்பது, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரம், அரபு நாடுகளிலிருந்து வரும் அன்னிய நேரடி முதலீடு, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அப்போது, விவாதிக்கப்பட்டது.

    மேலும் பாஸ்போர்ட் அலுவலகங்கள், இந்திய தூதரகங்கள், குடியேற்றப் பிரிவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை முறைப்படுத்துவதற்கான ஆன்லைன் நடைமுறையான அமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் அவுசாஃப் சயீத் எடுத்துரைத்ததாக வெளியுறவுத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சந்திப்பின் போது வெளிநாடுகளில் உயிரிழக்கும் இந்தியர்களின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கு கூடுதல் உதவி வழங்குமாறு மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொண்டது. பின்னர், சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தை டாக்டர் அவுசாஃப் சயீத் பார்வையிட்டதுடன், சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

    ×