search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான அருண்பிரகாஷ்
    X
    கைதான அருண்பிரகாஷ்

    மோசடி வழக்கில் கைதான கோவை தங்கம் மருமகன் ஆஸ்பத்திரியில் திடீர் அனுமதி

    பண மோசடி வழக்கில் கைதான கோவை தங்கம் மருமகன் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    கோவை:

    கோவை சாய்பாபா காலனி கணபதி லே- அவுட்டை சேர்ந்தவர் அருண் பிரகாஷ் (வயது 41).

    முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கத்தின் மருமகனான இவர் ரியல் எஸ்டேட், ஓட்டல் உள்பட பல்வேறு தொழில்களையும் செய்து வந்தார்.

    இதற்கிடையே அருண் பிரகாஷ் தொழில் தொடங்குவதாக கூறி பீளமேடு சிட்ரா சசிஅவென்யூ பகுதியைச் சேர்ந்த சிந்துஜா என்பவரிடம் ரூ.7 கோடியும், அவரது தந்தையிடம் ரூ.1½ கோடியும் வாங்கியுள்ளார். ஆனால் தொழில் எதுவும் தொடங்காமல் இருந்து வந்தார். இதையடுத்து பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டபோது அதனை தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து சிந்துஜா மற்றும் அவரது தந்தை செங்குட்டுவன் ஆகியோர் தனித்தனியே போலீசில் புகார் கொடுத்தனர்.

    இந்த நிலையில் சிந்துஜாவின் தந்தை செங்குட்டுவன் கொடுத்த புகாரின் பேரில் கோவை நகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 19-ந் தேதி அருண் பிரகாசை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி அவரை திருப்பூர் அவினாசி கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை பலத்த பாதுகாப்புடன் வாகனத்தில் அவினாசி நோக்கி அழைத்து சென்றனர்.

    இந்த நிலையில் சிறைக்கு அழைத்து செல்லக் கூடிய வழியில் அருண்பிரகாஷ் தனக்கு உடல்நிலை சரியில்லை என பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வாகனத்தை திருப்பி, அவரை உடனடியாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் அவரை அங்கு ஜெயில் கைதிகள் சிகிச்சை பெற கூடிய வார்டில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கடந்த 3 நாட்களுக்கும் மேலாக டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    Next Story
    ×