search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணா பல்கலைக்கழகம்
    X
    அண்ணா பல்கலைக்கழகம்

    என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 1-ந் தேதி முதல் வகுப்புகள்: அண்ணா பல்கலைக்கழகம்

    என்ஜினீயரிங் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வருகிற 1-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    என்ஜினீயரிங் கல்லூரியில் இளநிலை பி.இ., பி.டெக். படிப்புகளில் முதலாம் ஆண்டில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதற்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில், துணை கலந்தாய்வு இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குவது தொடர்பான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் வளாக கல்லூரிகளில் முழுநேர பி.இ., பி.டெக். முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக கல்வி படிப்புகள் மையம் தெரிவித்து இருக்கிறது.

    அதன்படி, வருகிற 1-ந்தேதி முதல் 2 வாரங்களுக்கு மாணவர்களுக்கு அடிப்படை கல்விகள், கற்றல் செயல்பாடுகள் உள்பட புத்தாக்க பயிற்சிகள் குறித்து நடத்தப்படும். அதன்பிறகு வருகிற 15-ந்தேதி முதல் படிப்புக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் தொடங்கப்படும். முதல் செமஸ்டருக்கான கடைசி வேலைநாட்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி ஆகும்.

    இந்த செமஸ்டருக்கான தேர்வு மார்ச் மாதம் 7-ந்தேதி ஆரம்பிக்கப்படும். அதேபோல், முதல் செமஸ்டருக்கான முதல் மதிப்பீட்டு தேர்வு டிசம்பர் 23-ந்தேதியில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி 3-ந்தேதிக்குள்ளும், 2-ம் மதிப்பீட்டு தேர்வு பிப்ரவரி 15-ந் தேதி முதல் 24-ந்தேதிக்குள்ளும் நடத்த வேண்டும்.

    முதல் மதிப்பீட்டுக்கான அறிக்கையை ஜனவரி 5-ந்தேதியும், 2-ம் மதிப்பீட்டுக்கான அறிக்கையை மார்ச் 1-ந்தேதியும் தேர்வு கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக கல்வி படிப்புகள் மையம் அறிவித்துள்ளது. அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    ஆன்லைன் படிப்பு

    இதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் வருகிற 1-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும், மாணவர் சேர்க்கைக்கு கல்லூரிகள் கூடுதல் காலக்கெடு கேட்டால், வருகிற 8-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்க அனுமதி வழங்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சிகள் நேரடியாக அளிக்கப்பட வேண்டும் என்றும், அதன்பின்னர் படிப்புக்கான வகுப்புகள் இட வசதிக்கு ஏற்ப நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ நடத்துவது பற்றி முடிவு செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது


    Next Story
    ×