search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் குழாய் சீரமைப்பு பணியின்போது மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் உடல்களை படத்தில் காணலாம்.
    X
    குடிநீர் குழாய் சீரமைப்பு பணியின்போது மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் உடல்களை படத்தில் காணலாம்.

    கரூரில் மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளர்கள் பலி

    கரூரில் குடிநீர் குழாய் சரி செய்யும் போது மின்சாரம் பாய்ந்ததில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    அரவக்குறிச்சி:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள சேந்தமங்கலம், மேல்பாகம் கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து மகன் வீரக்குமார் (வயது 32). திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா, பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்தவர் காளிராஜ் மகன் ஜே.சி.பி. ஓட்டுனர் அஜித்குமார்.

    இவர்கள் இருவரும் பள்ளப்பட்டி பேரூராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணி செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு பள்ளப்பட்டி, தெற்கு மந்தை தெரு அருகில் குடிநீர் குழாய் சீரமைக்கும் பணியில் இருவரும் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது இரவு நேரம் என்பதால் பணி தடைபடாமல் இருப்பதற்காக அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து மின் இணைப்பு எடுத்து, போக்கஸ் லைட் கட்டி, ஜே.சி.பி. எந்திரம் மூலம் குழி தோண்டிக்கொண்டிருந்தனர். ஜே.சி.பி. எந்திரத்தை அஜித்குமார் இயக்கினார். வீரக்குமார் கீழே குழியில் உள்ள மண் அள்ளிக்கொண்டிருந்தார்.

    அந்த சமயம் போதிய வெளிச்சம் இல்லாததால், போக்கஸ் லைட்டை வேறு இடத்தில் மாற்றுவதற்காக அதனை அஜித்குமார் எடுத்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தடுமாறி, கீழே வேலை செய்து கொண்டிருந்த வீரக்குமார் மீது விழுந்தார். அப்போது வீரக்குமார் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

    உடனடியாக சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் அந்த பகுதியில் மின்சார இணைப்பை துண்டித்தனர்.

    இச்சம்பவம் குறித்து வந்த தகவலின்படி அரவக்குறிச்சி போலீசார், விரைந்து சென்று இருவரது உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடிநீர் குழாய் சீரமைப்பு பணியில் இருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேர் மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×