search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீமான்
    X
    சீமான்

    கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்- சீமான் அறிக்கை

    தமிழ் நாட்டின் மீது திணிப்பதன் மூலம் இந்தியாவின் குப்பைத்தொட்டியாகத் தமிழ்நாடு பயன்படுத்தப் படுகிறது என்கின்ற எண்ணம் ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் குமுறல்களாக வெளிப்படுகிறது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளின் அணுக் கழிவுகளைக் கூடங்குளத்திலேயே சேமித்து வைக்க இந்திய “அணுவாற்றல் ஒழுங்குமுறை ஆணையம்“ அனுமதி வழங்கியுள்ளது பேரதிர்ச்சியளிக்கிறது.

    அணு உலையையே முற்று முழுதாக அகற்றவேண்டும் என்று மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அணுக்கழிவுகளைக் கூடங்குளத்திலேயே சேமித்து வைக்கும் வகையில், அடுத்தடுத்து அணுக்கழிவு மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதித்து வருவதென்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

    ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ மையம், அணு உலை, அணுக்கழிவு மையம் எனப் பேராபத்து நிறைந்த அழிவுத் திட்டங்களையெல்லாம் தமிழ் நாட்டின் மீது திணிப்பதன் மூலம் இந்தியாவின் குப்பைத்தொட்டியாகத் தமிழ்நாடு பயன்படுத்தப் படுகிறது என்கின்ற எண்ணம் ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் குமுறல்களாக வெளிப்படுகிறது.

    ஆகவே , கூடங்குளத்தில் அடுத்தடுத்து அணுக்கழிவு மையம் அமைக்கின்ற முயற்சியினை உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும், கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட ஐந்து மற்றும் 6-வது அணு உலை விரிவாக்கக்கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்தவேண்டுமெனவும் மத்திய அரசினை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் மாநிலத்தை ஆளும் திமுக அரசு நாடாளுமன்றத்தில் தமக்குள்ள எண்ணிக்கை பலத்தினைப் பயன்படுத்திக் தமிழகத்திற்கு பேராபத்தை விளைவிக்க கூடிய கூடங்குளம் அணு உலையினை நிரந்தரமாக மூட வழிவகைச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்... லடாக் எல்லையில் சீனா மீண்டும் படைகளை குவிக்கிறது- இந்தியா கடும் எதிர்ப்பு

    Next Story
    ×