search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயில் தண்டணை
    X
    ஜெயில் தண்டணை

    96 பேரிடம் ரூ.2.39 கோடி மோசடி- ஈமு நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டணை

    ஈமு நிறுவனத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 96 பேர் ரூ.2 கோடியே 39 லட்சத்து 15 ஆயிரத்து 600 பணத்தை முதலீடு செய்தனர்.
    கோவை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் குரு என்ற குருசாமி (வயது 40). இவர் கடந்த 2010-ம் ஆண்டு பெருந்துறையில் சுசி ஈமு பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

    இந்த நிறுவனத்தில் கவர்ச்சிகரமான 2 திட்டங்களை குருசாமி விளம்பரப்படுத்தினார். அதன்படி முதல் திட்டத்தில் ரூ.1.50 லட்சம் பணம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழி குஞ்சுகள் தீவனம், செட், மருந்து மற்றும் பராமரிப்பு பணமாக மாதம் ரூ.6ஆயிரம், வருட போனசாக ரூ.20ஆயிரம் மற்றும் 2 வருடம் கழித்து கட்டிய முழு பணமும் திருப்பி கொடுக்கப்படும் என்றும், 2-வது திட்டமான வி.ஐ.பி திட்டத்தில் ரூ 1.50 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ. 7 ஆயிரம் போனசாக வருடத்திற்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என்றும் 2 வருடம் கழித்து கட்டிய முழு பணமும் திருப்பி கொடுக்கப்படும் என அறிவித்து இருந்தார்.

    இதனை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 96 பேர் ரூ.2 கோடியே 39 லட்சத்து 15 ஆயிரத்து 600 பணத்தை முதலீடு செய்தனர்.

    ஆனால் குருசாமி தான் கூறிய படி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்தார். இதனால் பாதிக்கப்பட்ட நாமக்கல் அருகே உள்ள சேர்த்த மங்கலத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த 2012-ம் ஆண்டு புகார் செய்தார். புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து குரு என்கிற குருசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு கோவை டான்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, மோசடி செய்த குரு என்ற குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2 கோடியே 40 லட்சம் அபராதம் விதித்தார். மேலும் இந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 7 பேரை விடுதலை செய்தார். இன்று நடந்த விசாரணைக்கு குருசாமி ஆஜராகாததை அடுத்து நீதிபதி அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
    Next Story
    ×