search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    தமிழகத்தில் ஏற்றுமதியை அதிகரிக்க மாநில மேம்பாட்டு குழு- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    தென் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளித்திட தூத்துக்குடியில் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட சர்வதேச மையம் இந்தியாவில் முதல்முறையாக தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ‘ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு’ புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

    ஏற்றுமதியில் ஏற்றம் பெற்று இந்தியாவில் உள்ள முன்னணி இடத்தை நோக்கி தமிழ்நாடு செல்லத்தொடங்கியுள்ள இந்த நேரத்தில் இந்த மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சிக்குரியது.

    இந்தியா முழுவதும் கடந்த 20-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை ஒருவார காலத்துக்கு வர்த்தக மற்றும் வணிக வாரமாக கொண்டாடப்பட உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இப்போது 75-வது ஆண்டு விழாவை நாம் கொண்டாடக்கூடிய வகையில் இந்த மாநாட்டை நடத்திக்கொண்டு இருக்கிறோம்.

    தொழில் வளர்ச்சி என்பது தொழில்துறை வளர்ச்சி மட்டுமல்ல அது அனைத்து துறை வளர்ச்சி என்பதை உணர்ந்தவன் நான். அதுதான் இந்த மாநிலத்தின், நாட்டின் வளர்ச்சியாக விளங்கிட முடியும்.

    தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது

    சென்னையில் மட்டுமல்ல அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற மாநாடுகள் நடைபெறவேண்டும். அப்போதுதான் தொழில் வளர்ச்சிக்கு அது ஊக்கமாக அமையும். தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஏற்றுமதியை பெருமளவு பெருக்கிட ஏற்றுமதியாளர்களுக்கு இந்த அரசு உறுதியாக உதவும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து ஆதரவுகளை தெரிவிக்க நான் வந்துள்ளேன்.

    தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது எப்போதும் தமிழ்நாட்டின் வளர்ச்சியாக மட்டும் இருந்ததில்லை. அது இந்தியா முழுமைக்கும் பரந்த வளர்ச்சியாக இருந்திருக்கிறது. உலகம் முழுவதும் பரவிய வளர்ச்சியாகவும் இருந்துள்ளது.

    உலக வர்த்தகர்களும், வணிகர்களும் ஒன்று கூடும் இடமாக தமிழ் மாநிலம் அமைந்திருக்கிறது. அத்தகைய பழம்பெருமையை நாம் மீட்டாக வேண்டும். நம்முடைய தயாரிப்புகள் அனைத்தும் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும்.

    உலகின் முன்னணி தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் நிறுவனங்களை தொடங்கிட வேண்டும். அதாவது உலகம் முழுவதும் நாம் செல்ல வேண்டும். உலகம் தமிழகத்தை நோக்கி வந்தாக வேண்டும். மொத்தத்தில் தமிழகத்தின் தொழில் துறையின் உள்ளங்கையில் உலகமே இருக்கிறது. அதுவே உங்கள் இலக்காக அமைந்திட வேண்டும்.

    இந்திய அளவில் தொழில் துறையில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்பதை நான் பெருமை யோடு தெரிவித்துக் கொள்கிறேன். ரூ.1.93 லட்சம் கோடி ஏற்றுமதியுடன் இந்தியாவிலேயே தமிழ்நாடு 3-வது பெரிய ஏற்றுமதி மாநிலமாக விளங்கிக்கொண்டு இருக்கிறது. அகில இந்திய அளவில் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.97 சதவீதம் ஆகும். மோட்டார் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது.

    தமிழக தொழில்களில் உலகம் இருக்கும் வரையில் இலக்கு இருக்க வேண்டும். ‘மேட் இன் தமிழ்நாடு’ என்ற நிலை உருவாக வேண்டும். ஏற்றுமதி அதிகரிக்கப்பட வேண்டும். தோல் பொருட்கள், மின் சாதன பொருட்கள் தமிழகத்தில் அதிகமாக உற்பத்தியாகின்றன. மின் சாதன பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கப்பட வேண்டும்.

    இதுபோன்று பல தொழில்களில் நாம் முன்னணியில் இருந்து வருகிறோம். இதன் மூலம் நமது உற்பத்தியாளர்களும் ஏற்றுமதியில் மேன்மையை அடைந்திட முடியும். ஏற்றுமதி பொருளையும் அதிகமாக தயாரிக்க வேண்டும். அதே நேரம் அதன் தரமும் குறையாமல் இருக்க வேண்டும். ஏற்றுமதி துறை எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு கொரோனா ஊரடங்கு காலத்திலும் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது.

    இதன் காரணமாக ஏற்றுமதி நிறுவனங்கள் இப்போது முழுமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய மன நிறைவை அளித்துள்ளது. ஏற்றுமதி திறனை மேம்படுத்திட தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்த நடவடிக்கைகளில் மிக முக்கியமாக தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையை வெளியிட்டதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மாநிலத்தில் இருந்து ஏற்றுமதியை மேலும் மேம்படுத்த தலைமை செயலாளர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழு (கமிட்டி) ஒன்று அமைக்கப்பட உள்ளது.

    அதேபோல் சிறு-குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழிகாட்டும் குறு, சிறு, நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்களுக்கான கையேட்டினை இன்று நான் வெளியிட்டு இருக்கிறேன்.

    தென் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளித்திட தூத்துக்குடியில் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட சர்வதேச மையம் இந்தியாவில் முதல்முறையாக தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இன்று பல்வேறு தொழில்களுக்கு ரூ.2,200 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 41 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.


    Next Story
    ×