search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தந்தை கைது

    18 வயது பூர்த்தியாகாத சிறுமிகளை திருமணம் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குழந்தை திருமண தடுப்பு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
    பொள்ளாச்சி:

    கோவை காரமடை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சிவசக்தி (வயது 18). இவர் பச்சை குத்தும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    இதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி சிவசக்தி திருமணம் செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சிவசக்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில் திருமணத்திற்கு சிறுமியின் தந்தை உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்

    மற்றொரு சம்பவம்...

    இதேபோன்று அன்னூரில் 15 வயது சிறுமிக்கும் 30 வயது வாலிபருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து இன்று நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இந்த தகவல் தெரிந்து சமூக பாதுகாப்பு துறை அலுவலர் சாந்தாமணி, ஊர் நல அலுவலர் லட்சுமி மற்றும் குழுவினர் அந்த சிறுமியின் வீட்டுக்குச் சென்றனர்.

    சிறுமியின் பெற்றோரிடம் 18 வயது நிரம்பிய பிறகே திருமணம் செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அப்போது அந்த சிறுமி தான் 10-ம் வகுப்பு முடித்துள்னதாகவும், பிளஸ்-1 படிக்க விரும்புவதாகவும் அலுவலர்களிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து அந்த சிறுமியை கோவை அன்பு இல்லத்தில் சேர்த்தனர். மேலும் 18 வயது பூர்த்தியாகாத சிறுமிகளை திருமணம் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குழந்தை திருமண தடுப்பு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×