search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதாகரன்
    X
    சுதாகரன்

    சுதாகரனின் ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

    வி.என்.சுதாகரனுக்கு சொந்தமான செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூரில் உள்ள ரூ.30 கோடி மதிப்பிலான 21 ஏக்கர் நிலம் முடக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனும், சசிகலாவின் அண்ணன் மகனுமான வி.என்.சுதாகரனுக்கு சொந்தமான இடங்களும் அடங்கும். 5 நாட்கள் நீடித்த சோதனையில், சசிகலா குடும்பத்தினர் 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1,500 கோடி வரை, வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அத்துடன் சில ஆயிரம் கோடி ரூபாய்க்கு பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்களும் சோதனையில் சிக்கின. அந்த ஆவணங்கள் அடிப்படையில் சொத்துகள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன.

    வருமானவரித்துறை தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு ரூ.1,600 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது. 2020-ம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் பெயரில் இருந்த 65 சொத்துகள் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் சென்னை போயஸ் தோட்டத்தில் வேதா நிலையம் எதிரே, 22 ஆயிரத்து 460 சதுர அடி நிலத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடமும் அடங்கும். அத்துடன், ஆலந்தூர், தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 200 ஏக்கர் நிலங்கள் உள்பட ரூ.300 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகள் கையகப்படுத்தப்பட்டன.

    சசிகலாவுக்கு சொந்தமான செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் உள்ள ரூ.100 கோடி மதிப்பிலான பங்களாவை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமானவரித்துறை கடந்த 8-ந்தேதி முடக்கி நடவடிக்கை எடுத்தது. தற்போது சுதாகரனுக்கு சொந்தமான நிலங்கள் பினாமி சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளன.

    சசிகலா உள்பட அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நடந்த சோதனையில் கிடைத்த ஆணவங்களின் அடிப்படையில் அவரது சொத்துகள் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டு வருகின்றன. தற்போது, வி.என்.சுதாகரனுக்கு சொந்தமான செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூரில் உள்ள ரூ.30 கோடி மதிப்பிலான 21 ஏக்கர் நிலம் முடக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் இந்த சொத்தின் மூலம் ஆதாயம் பெறவோ, பிறருக்கு மாற்றவோ கூடாது.

    இதுகுறித்து பெங்களூரு சிறையில் உள்ள சுதாகரனுக்கும், ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா, மகன் தீபக் மற்றும் திருப்போரூர் சார்-பதிவாளர் ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மேற்கண்ட தகவல்களை வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    Next Story
    ×