search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடருமா?- உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை

    கொரோனாவை மேலும் கட்டுப்படுத்த தடுப்பூசியை அதிகளவுக்கு போடுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும், கட்டுப்பாடுகளை நீட்டிக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலைவாணர் அரங்கில் உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய் பேரிடர் துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு மற்றும் பொது சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் தமிழகத்தில் தற்போதுள்ள கொரோனா நிலவரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பண்ருட்டி, கரூர் உள்ளிட்ட சில ஊர்களில் பள்ளிக்கூடங்களில் கொரோனா பரவியதால் அதை தடுப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்தும் அதிகாரிகள் விவரித்து கூறினார்கள்.

    கொரோனா நோய் தொற்று மேலும் பல பள்ளிகளுக்கு பரவாமல் இருக்க என்னென்ன முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது பற்றியும் எடுத்துரைத்தனர்.

    அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழக எல்லையோர மாவட்டங்களில் கொரோனா பரவாமல் தடுக்க தடுப்பூசி முழுமையாக போடுவது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.

    தற்போது விநாயகர் சதுர்த்தி விழா உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்கள் வருவதாலும், 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதாலும் கொரோனாவை மேலும் கட்டுப்படுத்த தடுப்பூசியை அதிகளவுக்கு போடுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.

    மத்திய அரசு


    மத்திய அரசு இந்த மாதம் 30-ந்தேதி வரை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் 15-ந்தேதி வரை உள்ளது.

    இந்த கட்டுப்பாடுகளை இந்த மாதம் 30-ந்தேதி வரை நீட்டிப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை உள்ளது.

    அதேபோல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் உள்ளே செல்ல தடை உள்ளது. திருவிழாக்கள் நடத்துவதற்கும் தடை இருக்கிறது. இந்த தடையை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பது குறித்து முதல்-அமைச்சர்
    மு.க.ஸ்டாலின்
    அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.

    வணிக வளாகங்கள், கடைகளில் ஒரு நபருக்கும், மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வியாபாரம் செய்ய வணிகர்களை அறிவுறுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.

    கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அந்தந்த மாவட்டங்களில் நிலவும் நோய் பரவலின் அடிப்படையில் தகுந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? அல்லது கட்டுப்பாடுகள் தொடருமா? என்பது பற்றி இன்று மாலை அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

    Next Story
    ×