search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.கே.வாசன்
    X
    ஜி.கே.வாசன்

    அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்- ஜி.கே.வாசன்

    அரசு போக்குவரத்து துறையில் வரவுக்கும், செலவிற்கும் இடையே உள்ள நிதி பற்றாக்குறையை அரசே ஏற்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கொரோனா தொற்று அதிகமான காலத்திலும் மற்றும் ஊரடங்கு காலத்திலும், அரசு பேருந்துகளின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மற்றும் அத்தியாவசிய துறைகளில் பணியாற்றிய அலுவலர்களின் போக்குவரத்துக்காக பணியாற்றியதை முன்னிட்டு அவர்கள் முன்கள பணியாளர்களாக மதிக்கப்படுகிறார்கள்.

    இவர்களது ஊதிய ஒப்பந்த காலம் கடந்த 31.08.2019-ல் காலாவதியாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக பொருளாதார வசதியின்றி தவித்து வரும் சூழலில் இவர்களது ஊதியம் உயர்த்தப்பட 14-வது ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் ஏற்படுத்தி தர அரசும், நிர்வாகமும் முன்வர வேண்டும்.

    அதோடு அவர்களுக்கு சேர வேண்டிய நிலுவை தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வுபெற்றுள்ள அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பணப்பலன்கள் காலதாமதம் இன்றி முழுவதுமாக வழங்கிட வேண்டும்.

    போக்குவரத்து துறை மக்களின் சேவைக்காக செயல்படுகிறது. ஆகவே அரசு போக்குவரத்து துறையில் வரவுக்கும், செலவிற்கும் இடையே உள்ள நிதி பற்றாக்குறையை அரசே ஏற்க வேண்டும்.

    வர இருக்கின்ற போக்குவரத்து துறை மானிய கோரிக்கையில், இவ்வாண்டின் நிதிநிலை அறிக்கையிலேயே உரிய நிதியை ஒதுக்கீடு செய்து பொதுமக்களுக்கான சேவை மேம்படும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×