search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    வெற்றிக்கு தீவிரமாக உழைக்க வேண்டும் - மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை

    தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்துள்ள புதிய திட்டங்களை மக்கள் மத்தியில் விளக்கி ஓட்டு கேட்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதன் காரணமாக காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக, உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது.

    இந்த தேர்தலை வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஊரக, உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    இதையொட்டி வாக்காளர் பட்டியலை தயார் செய்வது, வாக்குச்சாவடிகள் அமைப்பது ஆகியவை தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளனர்.

    இதற்காக 70 பக்கங்கள் கொண்ட கையேடுகளும் வெளியிடப்பட்டு உள்ளன. இதையொட்டி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்ட உள்ளாட்சிகளுக்கு உதவித் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கும் பணி தொடங்கியுள்ளது. வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட செயலாளர்களுடன் 9 மாவட்டங்களில் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். மு.க.ஸ்டாலினுடன் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக உள்ளாட்சிதுறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அமைச்சர் கே.என்.நேரு

    இந்த கூட்டத்தில் 9 மாவட்டத்தில் உள்ள வெற்றி வாய்ப்பு நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலை பொருத்தவரை மாவட்ட செயலாளர்கள்தான் வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து தலைமைக்கு அனுப்புவது வழக்கம்.

    அந்த வகையில் வேட்பாளர் பட்டியலை தயார் செய்யும்போது கூட்டணி கட்சிகளையும் அனுசரித்து அவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் இடங்களை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

    தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்துள்ள புதிய திட்டங்களை மக்கள் மத்தியில் விளக்கி ஓட்டு கேட்க வேண்டும் என்றும் கூறினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க. மற்றும் தோழமைக்கட்சியினர் வெற்றி பெறும் வகையில் கடினமாக உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்கள் தங்களது மாவட்டத்தில் உள்ள கட்சி நிலவரங்களை எடுத்துரைத்தனர். அனைத்து இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் வகையில் எங்களது உழைப்பு இருக்கும் என்று உறுதி அளித்தனர்.

    உள்ளாட்சி தேர்தலுக்கான கட்சி பணிகளை முடுக்கி விட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவித்தனர். இதேபோல் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

    இதையும் படியுங்கள்...நீரஜ் சோப்ராவுக்கு பரிசு அறிவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

    Next Story
    ×