search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவசங்கர் பாபா
    X
    சிவசங்கர் பாபா

    3வது போக்சோ வழக்கில் நடவடிக்கை- சிவசங்கர் பாபா மீண்டும் கைது

    சிவசங்கர் பாபா மீது அடுத்தடுத்து 3 போக்சோ சட்டம் பாய்ந்துள்ளதால் அனைத்து வழக்குகளிலும் அவர் அடுத்தடுத்து ஜாமீன் பெற்று உடனடியாக வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீசுஷில் ஹரி இன்டர்நே‌ஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.

    பள்ளியின் முன்னாள் மாணவிகள் 3 பேர் அளித்த புகாரின் பேரில் சிவசங்கர் பாபா மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில் 2 வழக்குகளில் முதலில் போக்சோ சட்டம் போடப்பட்டு இருந்தது.

    பின்னர் 3-வது வழக்கிலும் போக்சோ சட்டத்தின் கீழ் சிவசங்கர் பாபா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    3 வழக்குகளிலும் சிவசங்கர் பாபாவை, போலீசார் அடுத்தடுத்து கைது செய்துள்ளனர். ஏற்கனவே 2 வழக்குகளில் சிவசங்கர்பாபா கைதாகி சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

    இந்தநிலையில் 3-வது போக்சோ வழக்கிலும் சிவசங்கர் பாபா இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதையொட்டி சி.பி.சி.ஐ.டி. போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் சிவசங்கர்பாபாவை இன்று ஆஜர்படுத்துகிறார்கள். முதல் வழக்கில் கைது செய்யப்பட்டபோது சிவசங்கர் பாபாவை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    இதன்பிறகு 2-வது வழக்கில் கைதான அவரை மேலும் 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில் 3-வது வழக்கிலும் இன்று சிவசங்கர் பாபாவை கூடுதலாக 14 நாட்கள் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போக்சோ வழக்குகளில் உடனடியாக ஜாமீன் கிடைக்காது. ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தாலே அதில் ஜாமீன் பெற்று வெளியில் வருவது மிகவும் சிரமம் ஆகும்.

    இந்தநிலையில் சிவசங்கர் பாபா மீது அடுத்தடுத்து 3 போக்சோ சட்டம் பாய்ந்துள்ளதால் அனைத்து வழக்குகளிலும் அவர் அடுத்தடுத்து ஜாமீன் பெற்று உடனடியாக வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×