search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் மா சுப்பிரமணியன்
    X
    அமைச்சர் மா சுப்பிரமணியன்

    பொதுமக்களுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் இலவச தடுப்பூசி திட்டம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    தமிழகத்தில் சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகள் உடனே ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.

    ஊசி போடும் மையங்களில் காலையிலேயே மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கிறார்கள். ஆனால் ஊசிகளுக்கு தான் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

    இதுவரை 1 கோடியே 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தினசரி 7 லட்சம் ஊசிகள் போடும் அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஆனால் தினசரி ஒதுக்கீடாக 4 முதல் 5 லட்சம் ஊசிகள்தான் கிடைக்கிறது.

    தமிழகத்தில் சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகள் உடனே ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

    கடந்த மாதம் 21-ந்தேதி முதல் தடுப்பூசிகளை மொத்தமாக கொள்முதல் செய்து மாநில வாரியாக மத்திய அரசு பகிர்ந்து அளித்து வருகிறது. அதில் 75 சதவீதம் ஊசிகள் அரசு மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக போடப்படுகிறது. 25 சதவீத ஊசிகள் தனியார் மருத்துவமனைக்கு விற்கப்படுகிறது.

    கோப்புப்படம்


    விலை கொடுத்து வாங்கி அதற்கு சேவை கட்டணத்தையும் சேர்த்து தனியார் ஆஸ்பத்திரிகள் பொதுமக்களிடம் வசூலிக்கின்றன. அதன்படி ஒரு டோஸ் ஊசி போட குறைந்த பட்சம் ரூ.800 முதல் ரூ.1250 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    எனவே எல்லோரும் தனியார் ஆஸ்பத்திரியை நாடவில்லை. இதனால் தனியார் ஆஸ்பத்திரிகளின் ஒதுக்கீடுகள் முழு அளவில் பயன்படாமல் போகிறது. நிறைய ஊசிகள் வீணாகியும் வருகிறது.

    இதை தவிர்க்கவும் அந்த 25 சதவீத ஊசியையும் பொதுமக்களுக்கு இலவசமாக போட்டு ஊசி போடுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். அதன்படி பெரிய தொழில் நிறுவனங்கள், கம்பெனிகள் ஆகியவற்றை தனியார் ஆஸ்பத்திரிகளுடன் இணைந்து பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை போட முடியும்.

    இந்த புதிய முயற்சி பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    பெரிய நிறுவனங்களில் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை மக்கள் சேவைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இது எல்லா நிறுவனங்களிலும் நடைமுறையில் இருப்பதுதான்.

    இப்போது அந்த தொகையை தடுப்பூசி திட்டத்துக்கு செலவிட அறிவுறுத்த திட்டமிட்டுள்ளோம். அதன் படி தனியார் நிறுவனங்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசிக்கான கட்டணத்தை செலுத்தி விடும். இதனால் தனியார் ஆஸ்பத்திரிகளும் பொதுமக்களுக்கு இலவசமாகவே தடுப்பூசி போட முடியும்.

    தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றார்.


    Next Story
    ×