search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X
    அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    3-வது அலை வந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

    10 கோடி தடுப்பூசியை விரைவாக தந்தால் 4 முதல் 5 மாதங்களில் அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு நிர்வாகம் தயாராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

    சென்னை:

    சைதாப்பேட்டை சின்னமலையில் தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா கட்டுப்பாடு தளர்வுகள் என்பது மக்களின் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அபாயம் நீங்கி விட்டதாக கருதக்கூடாது.

    3-வது அலை வரக்கூடாது. ஆனால் கண்டிப்பாக வரும் என்றே ஐ.சி.எம்.ஆர். மற்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள்.

    பல வெளிநாடுகளில் 3-வது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நம்மையும் 3-வது அலை தாக்கினால் பாதிப்பு மிக கடுமையாக இருக்கும்.

    வராமல் தடுப்பதற்கு அறிவியல் பூர்வமாக கண்டுபிடிப்புகள் இல்லாவிட்டாலும் கூட நம்மால் முடியும். அது பொதுமக்கள் கைகளில்தான் இருக்கிறது. கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். முக்கியமாக கூட்டமாக சேருவதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

    கோப்புபடம்

    தடுப்பூசி போட்டாலும் நோய் தொற்று ஏற்படுகிறதே என்கிறார்கள். அப்படி ஏற்பட்டால் பாதிப்பு குறைவு என்பதே பல நாடுகளில் இருந்து நாம் கற்றுள்ள பாடம்.

    தமிழகத்தை பொறுத்தவரை 12 கோடி தடுப்பூசி தேவை. ஆனால் இதுவரை 1.80 கோடி பேருக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது.

    தினமும் 7 லட்சம் வீதம் மாதம் 2 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் இருக்கிறது. ஆனால் தினமும் 4 முதல் 5 லட்சம் தடுப்பூசிகள்தான் கிடைக்கிறது.

    அரசு வேண்டுமென்றே தட்டுப்பாடு என்று கூறவில்லை. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் விழிப்புணர்வு அதிகம். மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருகிறார்கள்.

    பா.ஜனதாவினர் தடுப்பூசியை பகிர்ந்து கொடுப்பதில் பிரச்சினை என்று ஆலோசனை கூறுவதை விட்டு ஒன்றிய அரசிடம் அமர்ந்து பேசி மாதம் 2 கோடி தடுப்பூசி என்ற அளவில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யட்டும். 10 கோடி தடுப்பூசியை விரைவாக தந்தால் 4 முதல் 5 மாதங்களில் அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு நிர்வாகம் தயாராக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்...வீடியோ காலில் தனியாக பேசலாம் - வாலிபர்களுக்கு ‘ஆபாச வலை’ வீசும் பெண்கள்

    Next Story
    ×