search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடை
    X
    கடை

    தமிழகத்தில் இன்று முதல் கடைகள் இரவு 9 மணி வரை செயல்படும்

    அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில், கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை கருவிகொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த்தொற்று நிலையை கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு 19-7-2021 காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இறுதிச்சடங்குகளில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

    நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். மேலும், ஏற்கனவே இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் இன்று முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கூடுதல் செயல்பாடுகளும் அனுமதிக்கப்படுகின்றன. அதாவது, புதுச்சேரிக்கான பஸ் சேவை தொடங்கியது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத்தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாக மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்க வேண்டும்.

    டீக்கடை

    உணவகங்கள், டீக்கடைகள், அடுமனைகள் (பேக்கரி), நடைபாதை கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை வழக்கமான நிபந்தனைகளுக்குட்பட்டு 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில், கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை கருவிகொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

    குளிர்சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

    கடைகளின் நுழைவுவாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும்போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

    நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

    கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கு, நோய்த்தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

    வரையறுக்கப்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.

    நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், நோய்த்தொற்று பரவலை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு, வீடாக தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தொடர்புடைய துறைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

    கொரோனா நோய் தொற்று மேலாண்மைக்கான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் நடவடிக்கைகள் தொடரும்.


    Next Story
    ×