search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எக்ஸ்பிரஸ் ரெயில்
    X
    எக்ஸ்பிரஸ் ரெயில்

    தீபாவளி பண்டிகை ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

    கடந்த ஆண்டு கொரோனா பீதிக்கு மத்தியிலும், தீபாவளி டிக்கெட் முன்பதிவு வழக்கம் போல் இருந்தது. பல முக்கிய ரெயில்களில் இருக்கைகள் நிரம்பி வழிந்தன.
    சென்னை:

    தீபாவளி பண்டிகையின்போது சென்னை உள்பட வெளி மாவட்டங்களில் பணிபுரியும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வாடிக்கையான ஒன்றாகும். அந்தவகையில் ரெயிலில் பயணிக்க 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் நடைமுறை இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும், தீபாவளிக்கு சொந்த ஊருக்கு ரெயிலில் செல்ல டிக்கெட் முன்பதிவு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் காத்துக்கொண்டிருப்பார்கள்.

    காலை 8 மணிக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியதும், ஆன்-லைன் மூலம் மளமளவென பல முக்கிய ஊர்களுக்கு செல்லும் ரெயில்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிடும். இன்னும் பலர் டிக்கெட் கவுண்டர்களின் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்வதும், பலருக்கு டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவதும் வாடிக்கையாக நடக்கும் நிகழ்வாகும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பேரிடர் எதிரொலியால், தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவில் போதிய அளவில் பொதுமக்கள் ஆர்வம் காட்டாமல் மந்தமாக உள்ளது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 4-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதன்படி தீபாவளிக்கு முந்தைய நாளான 3-ந் தேதி (புதன்கிழமை) தொலைதூர ரெயில் பயணம் மேற்கொள்ள உள்ளவர்களுக்கு ரெயில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கி உள்ளது. இந்த முறை ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கினாலும், பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டவில்லை.

    அதனால் மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்ட ரெயில்களின் இருக்கைகள் எதுவும் நிரம்பாமல் உள்ளது. கொரோனா தொற்று உச்சத்தில் இருந்ததாலும், முழு ஊரடங்கு பிறப்பட்டிருந்ததாலும், போதிய அளவு பயணிகள் வராததால், பல ரெயில்களை தெற்கு ரெயில்வே ரத்து செய்திருந்தது. அதன்பின், தொற்று குறைந்து, பழைய நிலைக்கு மெல்ல மெல்ல திரும்பி வந்து கொண்டிருப்பதால், ஊரடங்கிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு, ரெயில்கள் அனைத்தும் இயக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு கொரோனா பீதிக்கு மத்தியிலும், தீபாவளி டிக்கெட் முன்பதிவு வழக்கம் போல் இருந்தது. பல முக்கிய ரெயில்களில் இருக்கைகள் நிரம்பி வழிந்தன. ஆனால் இந்த முறை டிக்கெட் விற்பனை தலைகீழாக உள்ளது. தற்போது இன்னும் கல்லூரிகள் திறக்கவில்லை. சென்னையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும், அவர்களின் சொந்த ஊர்களிலேயே வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வருகின்றனர்.

    அந்தவகையில் பலர் சொந்த ஊரிலே இருப்பதாலும், கொரோனா தொற்றின் 3-வது அலை, நவம்பர், டிசம்பர் மாதங்களில் வரும் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதாலும், பொதுமக்கள் தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதை ஒருவேளை தவிர்த்திருப்பார்கள் என்றும், அதனால் டிக்கெட் முன்பதிவு மந்தமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும், பல ரெயில்களில் 200-க்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாக உள்ளது. இருந்தாலும், கொரோனா அச்சம் மக்கள் மத்தியில் இருந்து முழுவதுமாக நீங்கியதும், நிச்சயம் டிக்கெட் முன்பதிவில் பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
    Next Story
    ×