search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    அமமுகவில் இருந்து தலைவர்கள் விலகல்

    அமமுக கட்சியை வலுப்படுத்த என்ன செய்யலாம் என்று டிடிவி தினகரன் ஆலோசித்து வருகிறார்.

    சென்னை:

    2016-ம் ஆண்டு  ஜெயலலிதா  மறைவுக்கு பிறகு இரும்புக் கோட்டையாக இருந்த அ.தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன.

    சசிகலா  அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், துணைச் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் கட்சி பதவிக்கு வந்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் பதவியில் இருந்து இறங்கியதும் 2017-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது.

    ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

    சசிகலா சிறை சென்றிருந்த நிலையில் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வை வழி நடத்தும் அளவுக்கு செல்வாக்கு பெற்றார். அதன்பிறகு அவரையும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி விட்டனர்.

    இந்த சமயத்தில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியை அப்போது கவிழ்க்க முயற்சி செய்தனர். கவர்னரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். இதனால் 18 எம்.எல்.ஏ.க்களும் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    சசிகலா

    இந்த சமயத்தில் டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் கட்சியும் உருவானது. ஆனால் அந்த கட்சியில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலர் அடுத்தடுத்து கட்சி மாறிய வண்ணம் இருந்தனர். 2019 பாராளுமன்ற தேர்தலில் டி.டி.வி.தினகரன் கட்சி படுதோல்வி அடைந்த பிறகு அக்கட்சியில் இருந்து ஏராளமானோர் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு செல்லத் தொடங்கினார்கள்.

    2021 சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதனால் அ.ம.மு.க. கட்சி நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது. கட்சியில் 2-ம் கட்ட தலைவர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு பெரும்பாலான நிர்வாகிகள் தி.மு.க.-அ.தி.மு.க.வுக்கு தாவி வருகின்றனர்.

    ஆரம்பத்தில் அ.ம.மு.க. வில் இருந்து தி.மு.க.வுக்கு வந்த செந்தில்பாலாஜி தனது திறமையை வெளிப்படுத்தி தி.மு.க. கரூர் மாவட்டச் செயலாளராகி தேர்தலில் வெற்றி பெற்று இப்போது மின்துறை அமைச்சராகி விட்டார். அவரது முயற்சியால் ஏராளமான அ.ம.மு.க. நிர்வாகிகள் தி.மு.க.வுக்கு வந்து விட்டனர். அ.ம.மு.க. துணைப்பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் நேற்று தி.மு.க.வுக்கு வந்து விட்டார்.

    ஆரம்பத்தில் அ.ம.மு.க.வில் இருந்து வந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தங்கதமிழ்ச்செல்வன், குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன், மாரியப்பன் கென்னடி உள்ளிட்ட பலரும் தங்களது ஆதரவாளர்களை தி.மு.க. பக்கம் இழுத்து வந்து விட்டனர்.

    சசிகலா மீது அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அ.ம.மு.க.வில் இருந்து மேலும் பல முன்னாள் எம்.எல்.ஏ.க்களாகிய நிலக்கோட்டை தங்கதுரை, ஆம்பூர் பாலசுப்பிமணியன், ஒட்டபிடாரம் சுந்தரராஜ், விளாத்திகுளம் உமா மகேஸ்வரி உள்ளிட்ட பலரும் அ.தி.மு.க.வில் ஐக்கியமாகி விட்டனர்.

    இது தவிர சென்னை மாவட்ட செயலாளர் சந்தானகிருஷ்ணன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பொன்ராஜா உள்ளிட்ட பலரும் தங்களது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க. இணைந்து விட்டனர்.

    தொடர்ந்து பலரும் அ.ம.மு.க.வில் இருந்து வெளியேறி வருகிறார்கள்.

    இப்போது அ.ம.மு.க.வில் துணைப் பொதுச்செயலாளர் சைதாப்பேட்டை ஜி.செந்தமிழன், தஞ்சாவூர் ரெங்கசாமி, பொருளாளர் திருச்சி மனோகரன் மற்றும் மாணிக்கராஜா உள்ளிட்ட ஒரு சில பிரபலங்கள் தான் உள்ளனர்.

    இதனால் அ.ம.மு.க. கட்சியை வலுப்படுத்த என்ன செய்யலாம் என்று டி.டி.வி.தினகரன் ஆலோசித்து வருகிறார்.

    Next Story
    ×